

குன்னூர்:
‘ஒக்கி’ புயல் காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னூர் உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. இதனால் குன்னூர்-மேட்டுப்பாளையம் ரெயில் பாதையில் காட்டேரி அருகே மண் சரிவு மற்றும் மரம் விழுந்தது. அப்போது மேட்டுப்பாளையத்தில் இருந்து சென்ற மலை ரெயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது.
பின்னர் அவை அகற்றப்பட்டவுடன் 1 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு ஊட்டியை நோக்கி சென்றது. அப்போது வெலிங்டன்-அருவங்காடு ரெயில் நிலையங்களுக்கு இடையே மண்சரிவு மற்றும் மரம் சாய்ந்து விழுந்தது. இதனால் ரெயில் வெலிங்டன் ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது.
இதற்கிடையே, கேத்தி-அருவங்காடு ரெயில் நிலையங்களுக்கு இடையே மண்சரிவு ஏற்பட்டதால், ஊட்டியில் இருந்து குன்னூருக்கு வந்த மலை ரெயில் கேத்தி ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். குன்னூர்-மேட்டுப்பாளையம் இடையே நேற்று மாலை மலை ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டது. இன்றும் (சனிக்கிழமை) மேட்டுப்பாளையம்- ஊட்டி மலை ரெயில் ரத்து செய்யப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
* கொடைக்கானல் மலைப்பாதைகளில் பல இடங்களில் மண் சரிந்து விழுந்தது. மரங்களும் வேரோடு சாய்ந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.