

தேர்தலில் வாக்குச்சீட்டு முறையை மீண்டும் அறிமுகம் செய்ய வேண்டும் என்று ஒவ்வொரு கட்சியும் விரும்பினால் அதை பரிசீலிக்க தயாராக இருப்பதாக பாரதிய ஜனதா பொதுச்செயலாளர் ராம் மாதவ் கூறியுள்ளார்.
தேர்தல்களில் மக்கள் வாக்களிப்பதற்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் முறைகேடுகள் நடப்பதாக சில அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
உத்தரபிரதேசத்தில் கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் யாரும் எதிர்பார்க்காத வகையில் பா.ஜனதா அமோக வெற்றி பெற்றது. மொத்தமுள்ள 403 தொகுதிகளில் 325 தொகுதிகளை அக்கட்சி கைப்பற்றியது.
அந்த தேர்தலில் வாக்குப்பதிவு எந்திரங்களில் முறைகேடு செய்து பா.ஜனதா வெற்றி பெற்றதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் அக்கட்சிகள் புகார் கொடுத்தன. அந்த குற்றச்சாட்டுகளுக்கு தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்தது.
உத்தரபிரதேசத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த உள்ளாட்சி தேர்தலில் சில வாக்குப்பதிவு எந்திரங்களில் எந்த பட்டனை அழுத்தினாலும் பா.ஜனதாவின் தாமரை சின்னத்துக்கு ஓட்டுகள் பதிவாவதாக தகவல்கள் வெளியாகின. அதற்கு வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டதாகவும், அந்த எந்திரங்களை மாற்றி விட்டதாகவும் அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.
இந்த நிலையில் டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய மாநாட்டில் வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு பதிலாக மீண்டும் வாக்குச்சீட்டு முறையை அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. பல பெரிய நாடுகளில் இன்னமும் வாக்குச்சீட்டு முறையே நடைமுறையில் இருப்பதாகவும் காங்கிரஸ் சுட்டிக்காட்டியது.
வாக்குப்பதிவு எந்திரம் தவறாக பயன்படுத்தப்படுகிறதோ என்ற அச்சம் அரசியல் கட்சிகளுக்கு இருப்பதாகவும், எனவே தேர்தல் நடைமுறையில் நம்பகத்தன்மையை மீட்டெடுக்கும் வகையில் வாக்குச்சீட்டு முறையை தேர்தல் ஆணையம் மீண்டும் கொண்டு வர வேண்டும் என்றும் காங்கிரஸ் வலியுறுத்தியது.
இதற்கு பதில் அளிக்கும் வகையில் பா.ஜனதா கட்சியின் பொதுச்செயலாளர் ராம் மாதவ் பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-
பெரும்பாலான அரசியல் கட்சிகளிடையே கருத்து ஒற்றுமை ஏற்பட்ட பிறகே தேர்தல்களில் வாக்குச்சீட்டு முறைக்கு பதிலாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. மீண்டும் வாக்குச்சீட்டு முறையை அறிமுகம் செய்ய வேண்டும் என்று ஒவ்வொரு கட்சியும் விரும்பினால் அதை பரிசீலிக்க பா.ஜனதா தயாராக உள்ளது.