ரியல் எஸ்டேட் உலகையே மிரள வைத்த டீல்! ரூ.271 கோடிக்கு பென்ட்ஹவுஸ் வாங்கிய இந்திய தொழிலதிபர்!

முன்னணி தொழிலதிபர்கள் மட்டுமின்றி, வெளிநாட்டு வாழ் இந்தியர்களும் இங்கு வீடுகளை வாங்க போட்டி போட்டு வருகின்றனர்.
Gurugram RealEstate
Gurugram RealEstate
Published on

இந்திய ரியல் எஸ்டேட் வரலாற்றிலேயே மிக விலையுயர்ந்த மற்றும் பிரம்மாண்டமான சொகுசு பங்களா விற்பனை ஒப்பந்தம் ஒன்று டெல்லிக்கு அருகிலுள்ள குருகிராமில் அரங்கேறியுள்ளது.

பிரபல தொழிலதிபர் மானவ் சர்தானா, அங்குள்ள ஒரு அதிநவீன பென்ட்ஹவுஸை ரூ.271 கோடிக்கு வாங்கி ஒட்டுமொத்த நாட்டின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

ஒரு சதுர அடி விலை எவ்வளவு தெரியுமா?

டி.எல்.எஃப் நிறுவனத்தின் அதிசொகுசு திட்டமான 'தி டாலியாஸ்' குடியிருப்பில் தான் இந்த டீல் நடந்துள்ளது. இந்த பென்ட்ஹவுஸின் மொத்த பரப்பளவு 17,200 சதுர அடியும், இதன் கார்பெட் ஏரியா மட்டும் சுமார் 10,500 சதுர அடியிலும் அமைந்துள்ளது.

கணக்கிட்டுப் பார்த்தால், கார்பெட் ஏரியாவின் அடிப்படையில் ஒரு சதுர அடிக்கு சுமார் ரூ.2.6 லட்சம் விலை கொடுத்து வாங்கப்பட்டுள்ளது. இது இந்தியாவில் ஒரு சதுர அடிக்கு விற்கப்பட்ட மிக காஸ்ட்லியான வீடுகளில் ஒன்றாக விளங்குகிறது.

மும்பைக்கு டஃப் கொடுக்கும் குருகிராம்:

இதுவரை இந்தியாவின் மிக விலையுயர்ந்த வீடுகள் மற்றும் சொகுசு வாழ்க்கை முறையில் மும்பைதான் முதலிடம் பிடித்து வருகிறது.

உதாரணமாக, மும்பை வொர்லி பகுதியில் லீனா காந்தி திவாரி ரூ.639 கோடிக்கும், மலபார் ஹில் பகுதியில் ஜே.பி.தப்பாரியா ரூ.369 கோடிக்கும் வீடுகளை வாங்கியுள்ளனர்.

ஆனால், இப்போது குருகிராமும் மும்பைக்கு இணையாக கோடீஸ்வரர்களின் சொர்க்க பூமியாக மாறி வருகிறது.

கோடீஸ்வரர்களின் கூடாரம்:

'தி டாலியாஸ்' திட்டத்திற்கு முன்பாக, குருகிராமில் இருந்த 'தி கேமலியாஸ்' என்ற திட்டத்தில் தான் பெரும் பணக்காரர்கள் வீடுகளை வாங்கி வந்தனர்.

அங்கு வாரன் பஃபெட்டின் நெருங்கிய கூட்டாளியான அஜித் ஜெயின் ரூ.85 கோடிக்கும், தொழிலதிபர் ரிஷி பார்ட்டி ரூ.190 கோடிக்கும் பென்ட்ஹவுஸ் வாங்கியிருந்தனர்.

ஆனால், இப்போது 'தி டாலியாஸ்' அந்த சாதனைகளை எல்லாம் முறியடித்து வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் டெல்லியைச் சேர்ந்த ஒரு தொழிலதிபர் இங்கு ரூ.380 கோடிக்கு 4 வீடுகளை மொத்தமாக வாங்கினார்.

'தி டாலியாஸ்' திட்டத்தின் பிரம்மாண்டம்:

இந்த ஒட்டுமொத்த திட்டத்தின் மதிப்பு மட்டும் ரூ.40,000 கோடிக்கும் அதிகம். மொத்தம் 8 கோபுர டவர்ஸ் மற்றும் 29 அடுக்கு மாடிகளைக் கொண்ட இந்த திட்டத்தில் 420 அல்ட்ரா-லக்சரி வீடுகள் மட்டுமே கட்டப்படுகின்றன.

இதில் 15 டூப்ளெக்ஸ் பென்ட்ஹவுஸ்கள் மற்றும் 3.5 லட்சம் சதுர அடியில் ஒரு பிரம்மாண்ட கிளப்ஹவுஸ் அமையவுள்ளது.

டி.எல்.எஃப் நிறுவனத்தின் முதன்மை வணிக அதிகாரி ஆகாஷ் ஓஹ்ரி கூறுகையில், "இந்த திட்டத்தில் 65% வீடுகள் ஏற்கனவே விற்றுத் தீர்ந்துவிட்டன. இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்கள் மட்டுமின்றி, வெளிநாட்டு வாழ் இந்தியர்களும் இங்கு வீடுகளை வாங்க போட்டி போட்டு வருகின்றனர்" என்று தெரிவித்துள்ளார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com