

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 670 காசுகளாக உயர்ந்ததால், சேலம் மற்றும் நாமக்கல் சில்லரை கடைகளில் முட்டை விலை 8 ரூபாயாக உயர்ந்துள்ளது. தீபாவளி பண்டிகை மற்றும் குளிர் காலம் காரணமாக விலை மேலும் உயர்ந்துள்ளதாக பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நாமக்கல் மண்டலத்தில் 7 கோடிக்கும் அதிகமான முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த முட்டைகள் தமிழக அரசின் சத்துணவு திட்டம் மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகள் மற்றும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதற்கான விலை நாமக்கல்லில் நிர்ணயம் செய்யப்படுகிறது.
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை கடந்த 29-ந்தேதி 570 காசுகளாக இருந்த நிலையில் பின்னர் முட்டை படிப்படியாக உயர்ந்து கடந்த 6-ந்தேதி முதல் 670காசுகளாக உள்ளது. தீபாவளி பண்டிகை மற்றும் குளிர் காலம் தொடங்கி உள்ளதால் முட்டை விலை உயர்ந்து வருவதாக பண்ணையாளர்கள் கூறி வருகிறார்கள்.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் 23-ந்தேதி முட்டையின் கொள்முதல் விலை 680 காசுகளாக இருந்தது. அது தான் முட்டை வரலாற்றில் அதிகபட்ச விலை. நடப்பாண்டிலும் அந்த விலையை நெருங்கி உள்ளதால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்னர்.
முட்டை பண்ணை கொள்முதல் விலை 670 காசுகளாக உயர்ந்த நிலையில் சேலம், நாமக்கல் மாவட்ட சில்லரை விற்பனை கடைகளில் முட்டை விலை 8 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கறிக்கோழி பண்ணை கொள்முதல் விலை 126 ரூபாயாகவும், முட்டை கோழி விலை 100 ரூபாயாகவும் உள்ளது.
சேலம், நாமக்கல் மாவட்ட கறிக்கோழி சில்லரை விற்பனை கடைகளில் கடந்த வாரம் 220 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ கறி இந்த வாரம் 250 ரூபாயாக உயர்ந்துள்ளது.