

முட்டை விலை 670 காசுகளிலிருந்து 625 காசுகளாக 2 நாட்களில் 45 காசுகள் சரிந்தது. தீபாவளி பண்டிகை முடிந்ததால் நுகர்வு குறைந்து விலை குறைக்கப்பட்டது.
நாமக்கல் மண்டலத்தில் 7 கோடிக்கும் அதிகமான முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த முட்டைகள் தமிழக அரசின் சத்துணவு திட்டம் மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகள் மற்றும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதற்கான விலை நாமக்கல்லில் நிர்ணயம் செய்யப்படுகிறது.
நாமக்கல் மண்டலத்தில் கடந்த 6-ந்தேதி முதல் முட்டை விலை 670 காசுகளாக இருந்தது. பின்னர் நேற்றுமுன்தினம் 20 காசுகள் சரிந்து 650 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டது.
இதற்கிடையே நேற்று நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் முட்டையின் தேவை மற்றும் உற்பத்தி குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தீபாவளி பண்டிகை முடிந்ததால் முட்டையின் நுகர்வு குறைந்ததால் அதன் விலையை மேலும் 25 காசுகள் குறைக்க முடிவு செய்யப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக முட்டை பண்ணை கொள்முதல் விலை மேலும் 25 காசுகள் சரிந்து 625 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டது. இந்த விலை இன்று காலை முதல் அமுலுக்கு வந்துள்ளது. கடந்த 2 நாட்களில் மட்டும் முட்டை விலை 45 காசுகள் சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் பொதுமக்கள் அதிக அளவில் முட்டைகளை வாங்கி சென்றனர். முட்டை விலை கணிசமாக குறைந்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கறிக்கோழி பண்ணை கொள்முதல் விலை கடந்த 11-ந்தேதி 126 ரூபாயாக இருந்த நிலையில் நேற்று முதல் 116 ரூபாயாக சரிந்தது. நேற்று முன்தினம் 92 ரூபாயாக இருந்த முட்டை கோழி விலையும் நேற்று 88 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டது.