பஸ் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம் தொடரும்: தொ.மு.ச. அறிவிப்பு

வருகிற 28-ந்தேதிக்குள் பிரச்சனை தீர்க்கப்படாவிட்டால் பஸ் ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டம் தொடரும் என தொழிலாளர் முன்னேற்ற சங்கம் அறிவித்துள்ளது.
பஸ் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம் தொடரும்: தொ.மு.ச. அறிவிப்பு
Published on

சென்னை:

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு 13-வது ஊதிய ஒப்பந்தத்தை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் அமல்படுத்த வேண்டும். ஆனால் இதுவரையில் புதிய ஊதிய உயர்வு செயல்படுத்தவில்லை. ஊதிய உயர்வை உடனே அமல்படுத்த வேண்டும். ஓய்வூதியங்கள் பணப்பலன்கள் உடனே வழங்க வேண்டும் என்பது போன்ற முக்கியமான கோரிக்கைகளை தொழிற்சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன.

கடந்த செப்டம்பர் மாதம் வேலைநிறுத்த போராட்டம் நோட்டீசை வழங்கினர். பின்னர் அனைவரின் கோரிக்கையை ஏற்று வேலைநிறுத்த போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்றனர். 3 மாதங்கள் ஆகியும் ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த தொ.மு.ச., சி.ஐ.டி.யூ., ம.தொ.மு.ச. உள்ளிட்ட 10 தொழிற்சங்கத்தை சேர்ந்த ஊழியர்கள் 2 நாட்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பங்கேற்ற டிரைவர்களும், கண்டக்டர்களும் நேற்று பஸ்களை இயக்காமல் புறக்கணித்தனர். இதனால் சென்னை உள்பட பல மாவட்டங்களில் பஸ் போக்குவரத்து பகலில் பாதிக்கப்பட்டது.

இதையடுத்து தொழிற்சங்க நிர்வாகிகளுடன் அமைச்சர் விஜயபாஸ்கர் பேச்சுவார்த்தை நடத்தினார். தற்போது ஆர்.கே.நகரில் இடைத்தேர்தல் நடப்பதால் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் பின்பற்றப்படுவதால் எவ்வித உறுதி மொழியும் எழுத்துப்பூர்வமாக தர முடியாததால் 26,27 ஆகிய தேதிகளில் பேச்சுவார்த்தைக்கு வருமாறு அமைச்சர் கூறியதை தொடர்ந்து போராட்டம் வாபஸ் ஆனது.

இதுகுறித்து தொ.மு.ச. பொதுச்செயலாளர் சண்முகம் கூறியதாவது:-

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு தற்போது குறைந்தபட்ச ஊதியமாக ரூ.16,000 உள்ளது. அதனை ரூ.21,000 ஆக உயர்த்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம். அரசு ஊழியர்களுக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும். போக்குவரத்து கழகத்தையும், தொழிலாளர்களையும் பாதுகாக்க அரசிடம் நிதி இல்லை. நிதி பற்றாக்குறையால் தான் இந்த பிரச்சனை நீடித்து வருகிறது. தொழிலாளர்களின் பென்சன் பணம் ரூ.7000 கோடி இன்னும் திரும்ப தரப்படவில்லை. இந்த நிலை தொடர்ந்து நீடித்து கொண்டே போனால் போராட்டத்தை தவிர வேறு வழியில்லை.

27, 28 ஆகிய இரு நாட்கள் நடக்கும் பேச்சுவார்த்தையின் போது சுமூக முடிவு ஏற்படவில்லை என்றால் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவோம். அரசு தொழிலாளர்களின் நிலையை அறிந்து நல்ல முடிவை அறிவிக்க வேன்டும்.

புதிய ஊதிய உயர்வை 1.9.2016 முதல் நடைமுறைப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com