சிவகிரி அருகே மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதி விபத்து - 3 பேர் பலி

சிவகிரி அருகே மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதிய விபத்தில் குழந்தையுடன் கணவன், மனைவி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
விபத்தில் பலியான சிவசக்தி மற்றும் குழந்தை துர்கேஷ்.
விபத்தில் பலியான சிவசக்தி மற்றும் குழந்தை துர்கேஷ்.
Published on

சிவகிரி:

நெல்லை மாவட்டம் சிவகிரி அருகே உள்ள ராயகிரி காமராஜர் தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 27), கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி சிவசக்தி (23). இவர்களுக்கு 3 வயதில் துர்கேஷ் , ஒரு வயதில் யோகேஷ் ஆகிய 2 குழந்தைகள் இருந்தனர்.

மாரிமுத்து தனது மாமியார் வீட்டுக்கு குடும்பத்தினருடன் சென்று இருந்தார். அங்கிருந்து நேற்று இரவு தனது மனைவி சிவசக்தி மற்றும் குழந்தைகளுடன் மோட்டார் சைக்கிளில் ஊருக்கு புறப்பட்டார்.

சிவகிரி அருகே உள்ளாறு பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த போது அந்த வழியாக வந்த அரசு பஸ், முன்னே சென்ற டிராக்டரை முந்தி செல்ல முயன்றது. அப்போது பஸ் எதிர்பாராத விதமாக‌ மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மாரிமுத்து உள்பட 4 பேரும் ஆளுக்கொரு திசையில் தூக்கி வீசப்பட்டனர். சிவசக்தி மற்றும் துர்கேஷ் ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தனர்.

மாரிமுத்து பலத்த காயமடைந்தார். யோகேஷ் லேசான காயம் அடைந்தான். தகவல் அறிந்த வாசுதேவநல்லூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பலியான தாய், மகன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு சிவகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மாரிமுத்துவை மேல்சிகிச்சைக்காக ராஜ பாளையத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். யோகேஷ் சிகிச்சைக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டான்.

இந்த நிலையில் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட மாரிமுத்து நேற்று நள்ளிரவு சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இதனால் பலி எண்ணிக்கை 3 ஆனது. விபத்து குறித்து வாசுதேவநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பஸ் டிரைவர் மதுரையை சேர்ந்த கண்ணன் (43) என்பவரை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுபோன்ற விபத்து தருணங்களில் சிவகிரி அரசு மருத்துவமனையில் முறையான சிகிச்சைகள் நடைபெறுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அங்குள்ள‌ டாக்டர் நோயாளிகளை சரியாக கவனிப்பதில்லை என்றும் பொதுமக்கள் புகார் தெரிவித்து உள்ளனர்.

விபத்தில் குழந்தையுடன் கணவன், மனைவி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com