

சென்னை:
சென்னை வளசரவாக்கம் பகுதியில் கடந்த மே 17-ந்தேதி சாலையோரம் முதியவர் ஒருவர் மயங்கி விழுந்து கிடந்தார். இதுகுறித்து பொதுமக்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அப்போது சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் முதியவரை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
அவர் யார்? என தெரியததால் புகைப்படத்துடன் கூடிய துண்டு பிரசுரங்கள் அச்சிட்டு வினியோகித்தனர். இதற்கிடையே இறந்த முதியவர் உடல் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டது. ஆனால் ஒரு மாதத்துக்கு மேல் ஆகியும் முதியவர் உடல் அடையாளம் காணப்பட வில்லை.
இதையடுத்து அடையாளம் தெரியாத முதியவர் உடல் குறித்து வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். பின்னர் தனியார் தொண்டு நிறுவன ஊழியர்கள் உதவியுடன் முதியவர் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இதுகுறித்த புகைப்பட ஆதாரங்களை போலீஸ் நிலையத்தில் ஒட்டி இருந்தனர்.
இந்நிலையில் மதுரவாயலை சேர்ந்த பாண்டுரங்கன் என்பவர் வளரசவாக்கம் போலீஸ் நிலையம் வந்தார். அடையாளம் தெரியாத உடல் என்று அடக்கம் செய்யப்பட்ட முதியவர் எனது தந்தை முருகேசன் என கூறினார்.
கடந்த மே 17-ந்தேதி காலையில் வீட்டில் இருந்து வெளியே சென்ற அவரை காணவில்லை என பல இடங்களில் தேடிப் பார்த்ததாகவும், தற்போதுதான் அவர் இறந்துபோன தகவல் தெரிந்து போலீஸ் நிலையம் வந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் இறந்து போன தனது தந்தை முருகேசன் உடலை தோண்டி எடுத்து இறுதிச் சடங்கு செய்ய அனுமதிக்க வேண்டும் என போலீசாரிடம் கோரிக்கை வைத்தார். அவரிடம் போலீஸ் அதிகாரிகள் கோர்ட்டு மற்றும் வருவாய்த் துறையினரிடம் இருந்து உரிய அனுமதி பெற்று உங்கள் தந்தை உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. எனவே உடலை தோண்டி எடுத்து மரியாதை செய்ய கோர்ட்டை அணுகுமாறு கூறினார்.
எனவே பாண்டுரங்கன் தனது தந்தை உடலை தோண்டி எடுத்து இறுதிச் சடங்குகள் செய்ய கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.