

உலக புகழ்பெற்ற சுற்றுலா தலமான நீலகிரிக்கு தமிழகத்தை தவிர வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் நாள்தோறும் குவிந்து வருகிறார்கள்.
சுற்றுலா பயணிகள் பெரும்பாலும் ஏ.டி.எம். கார்டுகளை பயன்படுத்துகிறார்கள். அப்படி ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி பணம் எடுக்கும்போது சில நேரங்களில் எந்திரத்தில் இருந்து கிழிந்த ரூபாய் நோட்டுகள் வருவதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமும் பெரும் அவதியும் அடைகிறார்கள்.
கோத்தகிரி- கொடநாடு செல்லும் சாலையில் உள்ளது ஈளாடா. இங்கு தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் அதனுடன் இணைந்த ஏ.டி.எம்.கள் செயல்பட்டு வருகின்றன. நேற்று இங்குள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஏ.டி.எம். மையத்துக்கு 2 கல்லூரி மாணவர்கள் தங்கள் வங்கி கணக்கில் இருந்து ரூ.5 ஆயிரம் எடுத்தனர். அதில் வந்த 500 ரூபாய் நோட்டுகள் எரிந்தும், கிழிந்தும் சேதமடைந்திருந்தது.
அதிர்ச்சியடைந்த மாணவர்கள் இதுகுறித்து வங்கி அதிகாரியிடம் கூறினர். பணி நேரம் முடிந்து விட்டதாக கூறி மாணவர்களிடம் இருந்த பணத்தை மாற்றிக்கொடுக்க மறுத்து விட்டார். இதனால் மாணவர்கள் அவதியடைந்தனர்.
இதுகுறித்து மாணவர்கள் கூறியதாவது:-
நாங்கள் நீண்ட தூரத்தில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறோம். ஊருக்கு வந்துள்ள நாங்கள் கல்லூரி விடுதிக்கு திரும்பும்போது செலவுக்காக ஏ.டி.எம்.மில் பணம் எடுத்தோம். எடுத்த பணம் அவ்வளவும் சேதமானது. வங்கி அதிகாரியும் மாற்றிக் கொடுக்கவில்லை. இதனால் நாங்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானோம்.
டெபாசிட் எந்திரத்தில் நாம் பணம் செலுத்தும்போது சிறு கறையோ, பேனா, பென்சில் எழுத்தோ இருந்தால் எந்திரம் ஏற்க மறுக்கிறது. அதே வங்கி ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்து எடுத்து அதே டெபாசிட் எந்திரத்தில் செலுத்த முயன்றால் அது ஏற்பதில்லை. இது வியப்பாகவும், வேதனையாகவும் உள்ளது.
இனிமேல் வங்கி நிர்வாகம் கூடுதல் கவனம் செலுத்தி ஏ.டி.எம். எந்திரங்களில் நல்ல நோட்டுக்களை வைத்து வாடிக்கையாளர்களின் அதிருப்தியை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.