

ஊத்துக்கோட்டை:
ஊத்துக்கோட்டையை அடுத்த ஆட்டரம்பாக்கம் அருகே உள்ள அல்லிகுழி பகுதியில் சுமார் 10 கிலோ மீட்டர் பரப்பளவில் அடர்ந்த காடு உள்ளது. கனமழை பெய்யும் போது வெள்ள நீர் ஆட்டரம்பாக்கம் வழியாக பாய்ந்து ஒதப்பை பகுதியில் கொசஸ்தலை ஆற்றில் கலக்கிறது.
அப்போது ஆட்டரம்பாக்கம் கிராம எல்லையில் ஓடும் ஓடையை கடந்துதான் கிருஷ்ணாபுரம், மணமேடு, சாந்துமேடு, அரியத்தூர், நம்பாக்கம், ரங்காவரம், பிளேஸ்பாளையம், அல்லி குழி கிராமங்களை சேர்ந்த பொது மக்கள் சென்று வர முடியும்.
ஓடைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடும் போது கிராம மக்கள் பூண்டி ஏரி ஷட்டர்கள் அருகே உள்ள கொசஸ்தலை ஆற்று தரைப்பாலம் வழியாக சென்று வருகின்றனர். பூண்டி ஏரி முழுவதுமாக நிரம்பும் போது உபரி நீரை கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடுவது வழக்கம். அப்படி தண்ணீர் திறந்து விடும் போது தரைப்பாலம் மூழ்கி விடும்.
இதனால் ஆட்டரம்பாக்கம் மற்றும் பூண்டி ஏரி தரைப்பாலம் வழியாக கிராம மக்கள் எங்கும் செல்ல முடியாமல் வீடுகளிலேயே முடங்கி கிடக்கும் நிலை ஏற்படும்.
கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பெய்த பேய் மழைக்கு பூண்டி ஏரியிலிருந்து உபரி நீர் அதிகபட்சமாக வினாடிக்கு 40 ஆயிரம் கனஅடியாக கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடப்பட்ட போது தரைப்பாலம் மூழ்கியது. அதே போல் அல்லிகுழி காட்டு ஓடைகளில் வெள்ளம் பெருக்கு கெடுத்து ஓடியதால் ஆட்டரம்பாக்கம் ஓடையில் வெள்ள நீர் பாய்ந்தது.
இதனால் கிராம மக்கள் சுமார் 20 நாட்கள் எங்கும் வெளியே செல்ல முடியாமல் அவதிப்பட்டனர்.
இதனை கருத்தில் கொண்டு ஆட்டரம்பாக்கத்தில் ஓடை மீது பாலம் அமைக்க வேண்டும் என்று கிராம பொது மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
அதன் பேரில் திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் வேணுகோபால் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 1 கோடியே 90 லட்சம் ஒதுக்கினார்.
இந்த நிதியை கொண்டு பாலம் அமைக்கும் பணி கடந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. ஆமை வேக பணியால் பாலம் கட்டுமான பணி இன்னும் முடிவடையவில்லை.
பருவ மழையை கருத்தில் கொண்டு போர்க்கால அடிப்படையில் பாலப் பணிகளை முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.