லஞ்சம் கேட்ட அதிகாரிகளை பணி நீக்கம் செய்ய வேண்டும்: சுதாவின் கணவர் ஆவேசம்

தந்தை இறந்ததற்கான இறப்பு சான்றிதழ் மற்றும் ஈமச்சடங்கு நிதி உதவி கேட்ட மகளிடம், லஞ்சம் கேட்ட அதிகாரிகளை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று மருமகன் ஆவேசமாக கூறினார்.
லஞ்சம் கேட்ட அதிகாரிகளை பணி நீக்கம் செய்ய வேண்டும்: சுதாவின் கணவர் ஆவேசம்
Published on

ஈமச்சடங்கு நிதி உதவி அளிக்க சுதாவிடம் லஞ்சம் கேட்ட அதிகாரிகள் குறித்து அவரது கணவர் திருபழனி கூறியதாவது:-

என் மனைவி சுதா, 9-ம் வகுப்புவரை படித்துள்ளார். எனது மாமனார் தொப்பையன் கடந்த ஆண்டு இறந்தார். அதற்கு ஈமச்சடங்கு நிதிஉதவி கேட்டு எனது மனைவி சுதா திருநாவலூர் கிராம நிர்வாக அலுவலகம், உளுந்தூர் பேட்டை தாலுகா அலுவலகத்திலும் விண்ணப்பித்திருந்தார். ஆனால் நிதிஉதவி அளிக்க அதிகாரிகள் லஞ்சம் கேட்டனர். மேலும் தொடர்ந்து அலையவிட்டனர். இதனால் தான் எனது மனைவி கலெக்டருக்கு மணியார்டர் மூலம் பணம் அனுப்பினார்.

உடனே கலெக்டர் எங்களை அழைத்தார். நானும் எனது மாமியார் குப்பம்மாளும் நேரில் சென்றோம். அப்போது கலெக்டர் நீங்கள் எங்களிடம் தெரிவித்திருந்தால் நான் நடவடிக்கை எடுத்திருப்பேன் என்றார். அதற்கு நாங்கள் ஏற்கனவே வாரவாரம் திங்கட்கிழமை நடக்கும் குறை தீர்க்கும் கூட்டத்தில் ஏற்கனவே மனு கொடுத்துள்ளோம் அதற்கு எந்த தீர்வும் இல்லை என்றேன். அதற்கு கலெக்டர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விசாரணை நடத்தி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.

அரசு அதிகாரிகள் தவறு செய்தால் அவர்களை சஸ்பெண்டு செய்தால் போதாது, பணிநீக்கம் செய்ய வேண்டும். மேலும் அதிகாரிகள் லஞ்சம் வாங்கக் கூடாது. எங்களை அலையவிட்டதுபோல் வேறுயாருக்கும் இந்த நிலை ஏற்படக்கூடாது.

நேற்று எனது மனைவி சுதா உடல்நிலை சரியில்லாததால் கலெக்டர் நடத்திய விசாரணையில் கலந்து கொள்ள வில்லை. வருகிற செவ்வாய்க்கிழமை அவர் விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்துக்கு வருவார். கலெக்டர் நடத்தும் விசாரணையில் கலந்து கொள்வார். மேலும் எங்களை போல் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதேபோல் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் நாங்களே முன்னின்று போராட்டம் நடத்துவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com