

கோவை:
பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதியின் ஊழலுக்கு பேராசியர்கள் மட்டுமல்லாமல் கேன்டீன் ஊழியர் முதல் அலுவலர்கள் வரை ஏராளமானோர் உடந் தையாக இருந்துள்ளதாக லஞ்ச ஒழிப்பு துறைக்கு புகார்கள் குவிகிறது.
இதுகுறித்து விசாரணை நடத்தி வரும் போலீசாருக்கு புதுபுது தகவல்கள் கிடைத்த வண்ணம் உள்ளது. உதவி பேராசிரியர், இணைப் பேராசிரியர்கள், பேராசிரியர் என 3 வகையான பணியிடங்களை கணபதி நிரப்பி உள்ளார். இதில் உதவி பேராசிரியர் பணியிடத்துக்கு ரூ.30 லட்சம், இணை பேராசியருக்கு ரூ.40 லட்சம், பேராசிரியருக்கு ரூ.50 லட்சம் என பேரம் நடந்துள்ளது.
உதவி பேராசியராக பணியாற்றுபவர்களுக்கு பதவி உயர்வு அளிப்பதற்கும் ரூ.20 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை பேரம் பேசப்பட்டிருக்கிறது. இவ்வாறு பேரம் பேசியவர்களில் பேராசிரியர் தர்மராஜ், தொலைதூர கல்வி இயக்குனர் மதிவாணன் ஆகியோர் அடங்குவர். இவர்களை போல பல்கலைகழகத்தின் மேலும் சில துறைகளை சேர்ந்த பேராசிரியர்கள் இடைத்தரகர்களாக செயல்பட்டுள்ளனர்.
இதுபோல பேராசிரியர் அல்லாத அலுவலக ஊழியர்கள், உதவியாளர்கள், டிரைவர் பணியிடங்கள் என பல தரப்பட்ட பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளது. இதில் பணியிட தகுதிக்கேற்ப பேரம் நடந்துள்ளது. தொகை முடிவானதும் முதல் கட்டமாக சில லட்சங்கள் கைமாறி உள்ளது. மீதி தொகையை கணபதி காசோலைகளாக வாங்கி உள்ளார்.
அந்த காசோலைகளில் தேதிகள் மட்டும் நிரப்பியிருக்கும். குறிப்பிட்ட தேதிக்குள் காசோலையில் நிரப்பிய தொகையை ரொக்கமாக கொடுத்து விட்டு காசோலைகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற வாய்மொழி ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே பணபரிமாற்றம் நடந்திருக்கிறது.
கணபதியை லஞ்ச ஒழிப்பு போலீசில் சிக்க வைத்த உதவி பேராசிரியர் சுரேஷ் மூலம் போலீசார் இதை உறுதி செய்தனர். ரொக்கமாக வாங்கிய பணத்தை கணபதி எங்கெங்கு முதலீடு செய்துள்ளார்? என்பதை கண்டறிய அவரது வங்கி கணக்கு விவரங்களை சேகரித்து விசாரித்து வருகின்றனர்.
இதேபோல கணபதி பினாமிகள் பெயரில் சொத்துக்கள் வாங்கி குவித்ததாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பான ஆவணங்கள் அவரது வீட்டில் சிக்கும் என கருதியே கோவையில் மட்டுமல்லாது திருச்சி துறையூரில் உள்ள அவரது வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர சோதனை நடத்தினர். ஆனால் இரு இடங்களிலும் சேர்த்து மொத்தத்தில் 44 பவுன் நகை, ரூ.1½ லட்சம் ரொக்கப் பணம் ஆகியவை மட்டுமே இருந்தன.
கணபதி மீது புகார்கள் வருவது புதிதல்ல. கடந்த ஓராண்டாகவே அடுக்கடுக்கான புகார்கள் வந்த நிலையில் உயர்கல்வித்துறை அதிகாரிகள் கடந்த 6 மாதத்துக்கு முன்பே லஞ்ச ஒழிப்பு போலீசாரின் விசாரணைக்கு உத்தரவிட்டனர். இதனால் கணபதி சுதாரிப்பாக இருந்து சொத்து ஆவணங்களை இடம் மாற்றியிருக்கலாம் என்று கருதுகின்றனர்.
இதுதொடர்பாக அவரது மனைவி சொர்ணலதாவிடம் விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்பு போலீசார் திட்டமிட்டுள்ளனர். #tamilnews