

சென்னை மெட்ரோ ரெயில் நிலைய அலுவலகங்களில் 350 ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். இதில் 50 பேர் பெண் ஊழியர்கள். இவர்களில் பெரும்பாலானோர் கைக்குழந்தைகள் வைத்துள்ளனர்.
மெட்ரோ ஊழியர்கள், மெட்ரோ ரெயில் நிலைய அலுவலக பணிக்கு வந்து விடுவதால் குழந்தைகளுக்கு தாய்ப்பாலூட்ட முடியவில்லை. அந்த குழந்தைகளை பராமரிக்கவும், வளர்க்கவும் மிகவும் சிரமப்பட்டு வருவதாக புகார்கள் கூறப்பட்டன.
இந்த நிலையில் பெண் ஊழியர்களின் சிரமத்தை போக்கும் வகையில் மெட்ரோ ரெயில் நிறுவனம் பெண் ஊழியர்களின் வசதிக்காக கைக்குழந்தைகளுக்கு தாய்ப்பாலூட்டும் அறையை மெட்ரோ நிலைய அலுவலக வளாகத்தில் புதிதாக அமைக்க முன்வந்துள்ளது.
மேலும் 6 மாதம் முதல் 10 வயது குழந்தைகளுக்காக விளையாடுவதற்கு பொம்மைகள், புத்தகங்கள் வசதியும் செய்யப்பட உள்ளது. குழந்தைகள் மேம்பாட்டுக்காக ‘ராஜீவ் காந்தி தேசிய குழந்தைகள் பகல் காப்பகம்’ திட்டத்தின் கீழ் இவ்வசதிகள் விரைவில் அமைக்கப்பட உள்ளன. காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை இந்த பராமரிப்பு மையம் செயல்படும்.
கைக்குழந்தைகளுக்கு பராமரிப்பு, பாலூட்டும் அறை, விளையாட்டு வசதிகள் செய்யப்பட இருப்பது குறித்து பெண் ஊழியர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து மெட்ரோ ரெயில் நிலைய அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
மெட்ரோ ரெயில் நிலைய பெண் ஊழியர்களின் நீண்டநாள் கோரிக்கையை தொடர்ந்து கைக்குழந்தைகள் பராமரிப்பு மையம், பாலூட்டும் அறை வசதிகள், சிறுவர்கள் விளையாட்டு மையம் விரைவில் அமைக்கப்பட உள்ளது.
புதுடெல்லி மெட்ரோ ரெயில் நிலையத்தில் முதன் முதலாக 4 வருடங்களுக்கு முன்பு இந்த வசதிகள் தொடங்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து 2-வதாக சென்னை மெட்ரோ ரெயில் நிலையத்தில் இந்த வசதிகள் விரைவில் அமைக்கப்பட உள்ளது. இதன்மூலம் பெண் ஊழியர்கள் மிகவும் பயன்பெறுவார்கள்.