

கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசு கடந்த மார்ச் 25-ந் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கை அமல்படுத்தியது. இந்த ஊரடங்கு 3-வது கட்டமாக வருகிற 17-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு காரணமாக நாடு முழுவதும் மதுபானக் கடைகள் மூடப்பட்டு இருந்தது. இதனால் குடிமகன்கள் நிலைமை கடும் திண்டாட்டமாக இருந்தது. இதனால் கள்ளச்சாராய விற்பனையும் அதிகமானது.
அதன்படி ஆந்திரா, கர்நாடகா, உத்தரப் பிரதேசம், டெல்லி, அசாம், ராஜஸ்தான், மராட்டியம், உத்தரகாண்ட் உள்ளிட்ட பல மாநிலங்களில் மதுபான விற்பனை தொடங்கியது.
43 நாட்களாக குடிக்க முடியாமல் ஏங்கி தவித்த மதுபான பிரியர்கள் கடை திறப்பதற்கு பல மணி நேரங்களுக்கு முன்பே திரண்டு விட்டனர். பல்வேறு மாநிலங்களில் பல இடங்களில் மதுபான கடைகளில் கட்டுக்கடங்காத கூட்டம் நிலவியது. நீண்ட வரிசையில் அதிகமான நேரம் காத்திருந்து அவர்கள் மதுவை வாங்கிச் சென்றார்கள்.
சில இடங்களில் 3 கிலோ மீட்டருக்கும் அதிகமான மதுபான பிரியர்கள் கூட்டம் இருந்தது.
சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும், என்ற நடைமுறையை பெரும்பாலான இடங்களில் பின்பற்றவில்லை. போலீசார் அடிக்கடி வந்து தலையிட்டு சமூக இடைவெளியை பின்பற்றுமாறு அறிவுறுத்தினார்கள்.
பல்வேறு இடங்களில் போலீசார் கட்டுக்கடங்காத கூட்டத்தை லேசான தடியடி நடத்தி ஒழுங்குபடுத்தினர்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் ரூ.100 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையானது. இது புதிய சாதனையாகும்.
வழக்கமாக நாள் ஓன்றுக்கு ரூ.70 முதல் 80 கோடிக்கு தான் மது விற்பனையாகும்.
நீண்ட நாட்களுக்கு பிறகு மதுபானக்கடை மீண்டும் திறக்கப்பட்டதால் குடிமகன்கள் அதிக அளவில் மதுவை வாங்கிச் சென்றனர்.
தலைநகரான லக்னோ வில் ரூ.6.3 கோடிக்கு விற் பனை நடந்தது. அதுவும் 4 மணி நேரத்துக்குள் விற்று தீர்ந்துவிட்டது.
கர்நாடக மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் செயல்படும் 4,500 கடைகள் காலை 9 மணிக்கு திறக்கப்பட்டன. மதுபானங்களை வாங்கு வதற்காக அதிகாலை 3 மணி முதலே வாடிக்கையாளர்கள் குவியத் தொடங்கிவிட்டனர்.
ஹசன் மாவட்டம் சாலே காமே சாலையில் உள்ள மதுபானக் கடை முன்பு திரண்ட மதுபான பிரியர்கள் கடையை மலர்களால் அலங்கரித்தனர். அதோடு கடை முன்பு அகல்விளக்கு ஏற்றி, ஆரத்தி எடுத்து, கைகளைக் கூப்பி பூஜைசெய்து வணங்கினர்
மாண்டியாவில் உள்ள ஒரு மதுக்கடை முன்பு பட்டாசு வெடித்து மது விற்பனையை கொண்டாடி வரவேற்றனர். பெங்களூரில் உள்ள ஒரு கடை முன்பு இளம்பெண் மண்டியிட்டு இரு கைகளை கூப்பி வணங்கிவிட்டு சென்று மதுவை வாங்கினார். பெங்களூரில் ஏராளமான பெண்கள் வரிசையில் நின்று வாங்கினார்கள்.
பெலகாவியில் ஞாயிற்றுக்கிழமை இரவே மதுபான கடைக்கு சென்ற குடிமகன்கள் தேங்காய் உடைத்து பூஜை செய்தனர். சிவமொக்காவில் காலை 7 மணிக்கே மதுக்கடைக்கு வந்துவிட்ட 93 வயது மூதாட்டி வரிசையில் நின்று மதுபானம் வாங்கிச் சென்றார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் எல்லைப்பகுதியில் அமைந்துள்ள கர்நாடக அரசு மதுபானக் கடையில் கூட்டம் நிரம்பி வழிந்தது. ஓசூரை சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்தவர்கள் அங்கு சென்று மதுபானங்களை வாங்கி சென்றனர். சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் அங்கு மதுபானம் அமோகமாக விற்பனையானது.
இதேபோல தலைநகர் டெல்லி, ஆந்திர மாநிலம் கடப்பா உள்ளிட்ட பல இடங்களில் மதுபான கடை முன்பு அதிகமான கூட்டம் இருந்தது.
பல்வேறு பகுதிகளில் காலையிலேயே மதுபானங்கள் விற்று தீர்ந்து விட்டன. அதிகமான அளவு இருப்பு இல்லாததால் மாலையில் விற்பனை நடைபெறவில்லை. இதனால் மதுவை வாங்க முடியாமல் ஏமாற்றத்துடன் செல்லும் நிலையும் ஏற்பட்டது.
மதுபானம் விற்பனை மூலம் நேற்று ஒரே நாளில் பல்வேறு மாநிலங்களில் கோடிக்கணக்கில் வருமானம் கிடைத்தது. அதே நேரத்தில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் மதுபானம் விற்பனை நடைபெறவில்லை.