திருச்சி, லால்குடி, துறையூரில் பா.ஜனதா கட்சியினர் சாலை மறியல் - பெண்கள் உள்பட 600 பேர் கைது

வேல் யாத்திரைக்கு அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து திருச்சி, லால்குடி, துறையூரில் பா.ஜனதா கட்சியினர் மறியல் போராட்டம் நடத்தினர். இதுதொடர்பாக பெண்கள் உள்பட சுமார் 600 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

திருச்சி:

தமிழகத்தில் பாரதீய ஜனதா கட்சி சார்பில் வேல்யாத்திரை நேற்று தொடங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு தமிழக அரசு அனுமதி அளிக்கவில்லை. இதனால் யாத்திரை செல்ல இருந்த பா.ஜனதா கட்சியின் மாநில தலைவர் எல்.முருகனை திருத்தணியில் போலீசார் கைது செய்தனர்.

இந்தநிலையில் திருச்சி மாநகர் மாவட்ட பா.ஜனதா கட்சி தலைவர் ராஜேஷ் குமார் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் அக்கட்சியினர் திரண்டு வந்தனர். அப்போது பா.ஜனதா கட்சியினர் மாநில தலைவர் எல்.முருகன் கைது செய்யப்பட்டதை அறிந்ததும், கையில் வேல் மற்றும் கொடிகளை ஏந்தி கொண்டு கலெக்டர் அலுவலகத்தில் இருந்து கோர்ட்டு நோக்கி ஊர்வலமாக புறப்பட்டனர்.

ஊர்வலத்தை வெஸ்ட்ரி மேல்நிலைப் பள்ளி அருகில் போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். இதனால் அவர்கள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டம் நடத்தினார்கள். இதனைத்தொடர்ந்து போலீசார் மறியலில் ஈடுபட்ட ராஜேஷ்குமார், மாநில செயலாளர் பார்வதி நடராஜன், மாநில இணைப்பொருளாளர் சிவசுப்பிரமணியன், மாநகர் மாவட்ட மகளிர் அணி பொருளாளர் மலர்கொடி உள்பட 243 பேரை கைது செய்து, வெஸ்ட்ரி பள்ளியில் தங்கவைத்தனர். இந்த போராட்டத்தையொட்டி கலெக்டர் அலுவலகம் செல்லும் சாலை மற்றும் அந்த பகுதி முழுவதும் நேற்று காலையிலிருந்து மதியம் வரை பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. போலீசார், பா.ஜனதா கட்சியினரை கைது செய்து வேனில் ஏற்றிச்சென்ற போது, தொண்டர் ஒருவர் போலீஸ் வேனின் பின்பகுதியில் இருந்த ஏணியில் தொங்கிய படி சென்றதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதுபோல் மாவட்ட பொது செயலாளர் கோவிந்தராஜ் தலைமையில் துறையூர் தாலுகா அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, போலீசாருக்கும், பா.ஜனதா கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் பா.ஜனதா கட்சியினர் திருச்சி-துறையூர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பாதுகாப்புக்கு இருந்த போலீசார், மறியலில் ஈடுபட்ட 75 பேரை கைது செய்தனர். மேலும் லால்குடியில் மாவட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்டோரையும், மணப்பாறை தாலுகா அலுவலகம் முன்பு மாவட்ட பொது செயலாளர் செந்தில் தீபக் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்ட 139 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com