ராமர் கோவில் கட்டுவதன் மூலம் ஆட்சியை பிடிக்க பா.ஜ.க. திட்டம்

ராமர் கோவில் கட்டுவதால் 2022-ல் உத்தரபிரதேச சட்டசபை தேர்தல் பாரதிய ஜனதா கட்சிக்கு சாதகமாக அமையும் என்று அக்கட்சியினர் கருதுகின்றனர்.
பாஜக
பாஜக
Published on

அயோத்தில் ராமர் கோவில் பிரச்சினை நீண்ட கால இழுபறிக்கு பிறகு இப்போது முடிவுக்கு வந்துள்ளது.

அங்கு ராமர் கோவில் கட்டிக்கொள்ள சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்ததன் மூலம் கட்டுமான பணி விரைவில் தொடங்க இருக்கிறது. இதற்காக அறக்கட்டளை ஒன்று நிறுவப்பட்டுள்ளது. அதன் முடிவின்படி கோவிலை கட்டும் பணி தொடங்கப்படும்.

ராமர் கோவில் கட்டுவதால் 2022 உத்தரபிரதேச சட்டசபை தேர்தல் பாரதிய ஜனதாவுக்கு சாதகமாக அமையும் என்று அந்த கட்சியினர் எதிர்பார்க்கிறார்கள்.

தற்போது யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது. ராமர் கோவில் கட்ட வேண்டும் என்று நடந்த போராட்டத்தில் தீவிரமாக பங்கேற்றவர்களில் யோகி ஆதித்யநாத்தும் ஒருவர்.

அவர் சார்ந்துள்ள கோரக்தம் மடம் சார்பில் போராட்டத்தை முன்னெடுத்து சென்றார்கள். யோகி ஆதித்யநாத்தின் குருவாக இருந்த மகான் அவைத்நாத் இந்த போராட்டத்துக்கு முக்கிய காரணமாக இருந்தார். அவரின் சீடரான யோகி ஆதித்யநாத்தும் அவர் வழியில் தீவிரமாக போராடினார்.
இப்போது அவர் முதல்-மந்திரியாக இருக்கும் நிலையில் ராமர் கோவில் கட்டும் சூழ்நிலை உருவாகி இருக்கிறது. எனவே கோவில் கட்டுமான பணி தொடங்கி விட்டால் பெரும்பாலான இந்துக்கள் பாரதிய ஜனதாவுக்கு ஆதரவாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கின்றனர்.

குறிப்பாக அயோத்தி அமைந்துள்ள பகுதியில் தலித் மக்கள் அதிகமாக உள்ளார்கள். அவர்களின் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்பது முக்கிய விருப்பமாக இருந்தது.

தலித் மக்கள் இதுவரை பகுஜன் சமாஜ் கட்சிக்கே ஆதரவாக இருந்து வந்துள்ளனர். ராமர் கோவில் கட்டிவிட்டால் அவர்களுடைய ஆதரவு பாரதிய ஜனதாவுக்கு கிடைக்கும் என்று கருதுகின்றனர்.

இதுமட்டுமல்லாமல் சமாஜ்வாடி கட்சிக்கு வழக்கமாக செல்லும் பிற்படுத்தப்பட்டோர் ஓட்டுக்களும் பெருமளவு பாரதிய ஜனதாவுக்கு வந்துவிடும் என்று நினைக்கின்றனர்.

இதனால் 2022-ல் மீண்டும் எளிதாக ஆட்சியை பிடித்துவிடலாம் என்ற நம்பிக்கை அவர்களிடம் உள்ளது.

இதன் கட்டுமான பணி முடிய பல ஆண்டுகள் ஆகும். 2024 பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக கோவிலை கட்டி முடித்துவிட வேண்டும் என்பது பாரதிய ஜனதாவின் திட்டம். அப்போது தான் பாரதிய ஜனதாவுக்கு அதிக ஆதரவு கிடைக்கும் என்று நினைக்கிறார்கள்.

ஆனால் உத்தரபிரதேச சட்டசபை தேர்தலுக்கு முன்பாக கோவிலின் கட்டுமான பணிகளை பாதிக்கு மேல் முடித்துவிட வேண்டும். கட்டுமான பணியின் தோற்றம் மக்களுக்கு தெரியும் வகையில் இருந்தாலே பாரதிய ஜனதாவுக்கு ஆதரவாக மக்கள் மாறிவிடுவார்கள் என்று கருதுகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com