‘பத்மாவதி’ படத்துக்கு பா.ஜனதா எதிர்ப்பு - தடை விதிக்க தேர்தல் கமி‌ஷனுக்கு கடிதம்

பத்மாவதி படம் வெளியானால் குறிப்பிட்ட பிரிவினரிடையே தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் தடை விதிக்க கோரி தேர்தல் கமி‌ஷனுக்கு பா.ஜனதா கடிதம் எழுதியுள்ளது.
பத்மாவதி வேடத்தில் தீபிகா படுகோனே
பத்மாவதி வேடத்தில் தீபிகா படுகோனே
Published on

சித்தூர் ராணி பத்மினியின் கதை இந்தியில் ‘பத்மாவதி’ என்ற பெயரில் சினிமாவாக தயாரிக்கப்பட்டுள்ளது.

நடிகை தீபிகா படுகோனே ராணி பத்மினியாக நடித்துள்ளார். பிரபல இயக்குனர் சஞ்சய் லீலா பன்சால் என்பவர் திரைக்கதை வசனம் எழுதி இயக்கி உள்ளார். கவிஞர் மாரிக் முகமது ஜெயாசி எழுதிய கவிதையை அடிப்படையாக கொண்டு இந்தப் படம் தயாரிக்கப்பட்டுள்ளது.

நடிகர் ஷாகித் கபூர் ராணி பத்மினியின் கணவர் ராவல் ரத்தன் சிங்காகவும் டெல்லியை ஆண்ட சுல்தான் அலாவுதீன் கில்ஜியாக ரன்வீர் சிங்கும் நடித்துள்ளனர்.

வருகிற டிசம்பர் 1-ந்தேதி பத்மாவதி படம் திரைக்கு வருகிறது. இதற்கிடையே பத்மாவதி படத்துக்கு ரஜபுத்தர மன்னர்களின் வம்சத்தின் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

குஜராத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறும் இந்த நேரத்தில் பத்மாவதி படம் வெளியானால் குறிப்பிட்ட பிரிவினர் இடையே தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் பா.ஜனதா இந்தப் படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

‘பத்மாவதி’ படத்தை திரையிட தடை விதிக்க கோரி தேர்தல் கமி‌ஷனுக்கு பா.ஜனதா கடிதம் எழுதியுள்ளது. சித்தூர்ராணி பத்மினியின் கதை ஏற்கனவே 1963-ம் ஆண்டு தமிழில் சிவாஜி கணேசன், வைஜெயந்தி மாலா நடிப்பில் திரைப்படமாக வெளியானது. சி.எச்.நாராயண மூர்த்தி இயக்கி இருந்தார்.

700 வருடங்களுக்கு முன் டெல்லியை சுல்தான் அலாவுதீன் கில்ஜி ஆண்டான். அந்த காலத்தில் இந்து ரஜபுத்திர வம்சத்தைச் சேர்ந்த சித்தூர் ராணி பத்மாவதியின் (பத்மினி) பேரழகைப் பற்றி கேள்விப்பட்டு அவளை அடைய திட்டமிட்டான். ராணி பத்மினியின் கணவர் ரத்தன் சிங் மேவார் பகுதியை ஆண்ட ரஜபுத்திர மன்னன் ஆவான்.

ராணி பத்மினி ராஜஸ்தானில் சித்தூர் கோட்டையில் தங்கி இருப்பதை கேள்விப்பட்டு அலாவுதீன் கில்ஜி தனது பெரும்படையுடன் புறப்பட்டு ராஜஸ்தான் வந்து சித்தூர் கோட்டையை முற்றுகையிட்டான்.

சித்தூரை வெல்ல முடியாததால் “நான் சித்தூரை வெல்ல வரவில்லை. பத்மினியின் அழகை ஒரே ஒருமுறை பார்த்துச் செல்லவே வந்ததாக” மன்னனுக்கு தூது அனுப்பினான்.

அவனது வார்த்தையை நம்பிய மன்னன், ஓரிரு வீரர் துணையுடன் கோட்டைக்குள் வரலாம் என்றும், ரஜபுத்திர பெண்கள் வேறு ஆண்களை பார்க்க கூடாது என்பதால் நிலைக் கண்ணாடியில் அவளது உருவத்தை பார்த்துச் செல்லலாம் என்றான்.

ஆனால் ராணி பத்மினியின் அழகில் மயங்கிய அலாவுதீன் கில்ஜி சூழ்ச்சி செய்து மன்னனை கைது செய்து டெல்லிக்கு கொண்டு சென்றான். உன் மனைவியை என்னிடம் ஒப்படைத்தால் உன்னை விடுதலை செய்து சித்தூர் மன்னனாக்குகிறேன் என்று கூறுகிறான். இதற்கு மன்னன் இணங்கவில்லை.

இதை கேள்விப்பட்ட ராணி பத்மினி என் கணவனை விடுவித்தால் நான் மூடிய பல்லக்கில் என் பரிவாரம் புடை சூழ உன்னிடம் வரத் தயார் என்று பதில் அனுப்புகிறாள்.

ஆனால் பல்லக்கில் ராணியோ பெண்களோ செல்லாமல் அதில் வீரர்கள் செல்கிறார்கள். அவர்கள் போரிட்டு மன்னன் பீம சிங்கனை மீட்கிறார்கள்.

இதனால் ஆவேசம் அடைந்த அலாவுதீன் கில்ஜி மீண்டும் சித்தூர் மீது முழு வீச்சில் படை எடுக்கிறான். தோல்வி நிச்சயம் என்ற நிலையில் மன்னன் உயிர் துறந்தான்.

இதே போல அந்தப்புரத்தில் ராணி பத்மினி மாபெரும் தீ வளர்த்து அதில் நூற்றுக்கணக்கான பெண்களுடன் தானும் குதித்து சாம்பலாகிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com