4 ஆண்டு மத்திய ஆட்சியில் தலித்களுக்கு எதுவும் செய்யவில்லை- மோடிக்கு பாஜக எம்.பி. கடிதம்

நாட்டில் உள்ள 30 கோடி தலித் மக்களுக்கு 4 ஆண்டுகால பா.ஜனதா ஆட்சியில் அவர்களுக்கு எதுவும் செய்யவில்லை என்று பாஜக எம்.பி. பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். #pmmodi #Dalits
4 ஆண்டு மத்திய ஆட்சியில் தலித்களுக்கு எதுவும் செய்யவில்லை- மோடிக்கு பாஜக எம்.பி. கடிதம்
Published on

புதுடெல்லி:

உத்தரபிரதேச மாநிலத்தில் தாழ்த்தப்பட்டோருக்கு ஒதுக்கப்பட்ட 17 எம்.பி. தொகுதிகள் உள்ளன. கடந்த பாராளுமன்ற தேர்தலில் இந்த 17 தொகுதிகளிலும் பாரதீய ஜனதா வெற்றி பெற்றது. அதில் சில எம்.பி.க்கள் பாரதீய ஜனதாவுக்கு எதிராக கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.

ஏற்கனவே சாவித்திரி பாய் புலே, சோட்டாலால், அசோக் தோக்கிரி ஆகியோர் மத்திய அரசை எதிர்த்து கருத்து கூறினார்கள்.

இப்போது யஷ்வந்த்சிங் என்ற பா.ஜ.க. எம்.பி.யும் மத்திய அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ளார். நாகினா தொகுதியில் இருந்து எம்.பி.யாக தேர்ந்து எடுக்கப்பட்ட யஷ்வந்த்சிங் பிரபல டாக்டர் ஆவார். எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் டாக்டராக இருந்த அவருக்கு பா.ஜனதா சார்பில் டிக்கெட் கொடுக்கப்பட்டது.

யஷ்வந்த்சிங், பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

நான் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டதும் உங்களை நேரடியாக சந்தித்தேன். அப்போது பல்வேறு துறைகளிலும் தலித்களுக்கு இட ஒதுக்கீடு மற்றும் பதவி உயர்வுகளை முறையாக செயல்படுத்த நவடிக்கை எடுக்கும்படி கேட்டு கொண்டேன்.

ஆனால், அவை செயல் படுத்தப்படவில்லை. 30 கோடி தலித் மக்கள் நாட்டில் இருக்கிறார்கள். அவர்கள் உங்கள் ஆட்சி மூலம் எந்த ஒரு நேரடி பயனையும் அடையவில்லை. 4 ஆண்டுகால ஆட்சியில் அவர்களுக்கு எதுவும் செய்ய வில்லை.

நீதித்துறையில் தலித்துகள் புறக்கணிக்கப்பட்டு இருக்கிறார்கள். நீதிமன்றங்களில் அவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் அளிக்கப்படவில்லை. இந்தியாவின் 70 சதவீத சொத்துக்களை ஒரு சதவீத நபர்கள் அனுபவிக்கின்றனர். அதை மாற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

யஷ்வந்த்சிங்கின் கடிதம் பாரதீய ஜனதாவில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

உத்தரபிரதேசத்தில் மாயாவதியும், அகிலேஷ் யாதவும் தற்போது கை கோர்த்து இருக்கிறார்கள். இதன் மூலம் 2 எம்.பி. தொகுதி இடைத்தேர்தலில் சமாஜ்வாடி கட்சி வெற்றி பெற்றது.

2019 பாராளுமன்ற தேர்தலில் அவர்கள் கூட்டணி அமைத்து போட்டியிட்டால் பெரும்பாலான தொகுதிகளில் அந்த கூட்டணி வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே, பாரதீய ஜனதாவில் உள்ள தலித் தலைவர்கள் பலரும் வேறு முடிவுகளை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

இதுபற்றி பாரதீய ஜனதா தலைவர் ஒருவர் கூறும் போது, 2019 தேர்தலில் இப்போதைய எம்.பி.க்கள் சிலருக்கு டிக்கெட் வழங்கப்படாது என்று தெரிவதால் அவர்கள்தான் இது போன்ற எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறார்கள் என்று கூறினார். #tamilnews #pmmodi #Dalits

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com