

புதுச்சேரி:
புதுவை மாநில பாரதிய ஜனதா தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதுவை மாநிலத்தில் மிகுந்த நஷ்டத்தில் இயங்கி வரும் பொது நிறுவனங்களுக்கு பல ஆண்டுகளாக வாரிய தலைவர்கள் நியமனத்தின் மூலம் மக்களின் வரி பணம் பல கோடி ரூபாய் விரயமானது. இதனை கவர்னர் மக்களின் நலன் கருதி ரத்து செய்தார்.
ஆனால், முன்னாள் தலைமை செயலாளர் மனோஜ் பரிதா தவறான வழிகாட்டுதலின் பேரில் கவர்னர் ரத்து செய்த வாரிய தலைவர்கள் பதவியை மீண்டும் எம்.எல்.ஏ.க்கள் மூலம் நியமித்துள்ளார்.
மீண்டும் மக்கள் நலன் கருதி வாரிய தலைவர்கள் நியமனத்தை ரத்து செய்ய கோரி கடிதத்தை கவர்னர் மத்திய உள்துறைக்கு அனுப்பி வைத்துள்ளார். வாரிய தலைவர்களால் மக்களுடைய வரிப்பணம் கோடிக்கணக்கான ரூபாய் விரையம் ஆவதை பா.ஜனதா வன்மையாக கண்டிக்கிறது.
தொடர்ந்து புதுவை மாநிலம் நிர்வாக சீர்கேட்டால் சிக்கி தவிக்கிறது. இதற்கு காரணமாக இருந்த முன்னாள் தலைமை செயலாளர் மனோஜ் பரிதா ஆளும் காங்கிரஸ் அரசுக்கு ஆதரவாக செயல்பட்டு கொண்டு பல்வேறு துறையிலும் முறைகேடு அதிகமாக உள்ளது வெளிப்படையாகவே தெள்ளத்தெளிவாக தெரிகிறது.
புதுவை பா.ஜனதா சார்பில் மத்திய உள்துறை மந்திரியை சந்தித்து தலைமை செயலாளரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை வைத்ததன் விளைவாக இப்போது அவர் மாற்றப்பட்டுள்ளார்.
கவர்னரின் இந்த துணிச்சலான நடவடிக்கையால் மக்களுடைய வரிப் பணம் விரையமாவது தடுக்கப்பட்டுள்ளது. 7 எம்.எல்.ஏ.க்களும் அந்தந்த வாரியத்துக்கு தகுதியானவர்களா? என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
மேலும் ஒருவருக்கு ஒரு பதவி என்று இருக்கும் போது, எம்.எல்.ஏ.வாக இருப்பவர்களுக்கே வாரிய தலைவர் பதவி என்பது முரண்பாடாக உள்ளது. மேலும் தன்னுடைய சகாக்களை திருப்திப்படுத்த முதல்-அமைச்சர் நாராயணசாமி கையாளுகின்ற முறையே வாரிய தலைவர் நியமனம். வாரிய தலைவர்கள் நியமனத்தால் அரசாங்கத்தின் பணம் மட்டுமல்லாமல், பொது மக்களின் வரி பணமும் விரையம் செய்யப்படுகிறது.
கவர்னரின் மிக முக்கியமான குறிக்கோள் பொதுமக்களுடைய வரி பணம் விரையமாவதை தடுக்கும் நோக்கத்திலேயே வாரிய தலைவர் நியமனத்தை ரத்து செய்துள்ளார்.
மேலும் லாபகரமாக இயங்கினால் அதனை ஏற்றுக்கொள்ளலாம். மிகுந்த நஷ்டத்தில் இயங்கி வரும் வாரியத்துக்கு தலைவர் எதற்கு? என்று மக்கள் போராட்டத்தில் ஈடுபட வேண்டும். கவர்னர் நடவடிக்கைக்கு புதுவை பா.ஜனதா முழு ஒத்துழைப்பு அளிக்கிறது.
இவ்வாறு அறிக்கையில் கூறி உள்ளார்.