பாராளுமன்றத்தில் காங்கிரசுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கிடையாது - பா.ஜனதா முடிவு
காங்கிரஸ் கட்சிக்கு ராகுல்காந்தி பொறுப்பு ஏற்ற பிறகு வெற்றியை விட அதிக அளவில் தோல்விதான் கிடைத்து வருகிறது.
பாரம்பரியம் மிக்க காங்கிரஸ் கட்சிக்கு கடந்த 2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் 44 இடங்களில் மட்டுமே வெற்றி கிடைத்தது. இதனால் எதிர்க்கட்சி அந்தஸ்தை காங்கிரஸ் கட்சி இழந்தது.
சமீபத்தில் நடந்த பாராளுமன்றத் தேர்தலிலும் காங்கிரஸ் கட்சிக்கு 52 இடங்களில் மட்டுமே வெற்றி கிடைத்தது. ராகுலும், பிரியங்காவும் மோடியை மிக மிக மோசமாக விமர்சித்து பேசி பிரசாரம் செய்தும் கூட காங்கிரஸ் கட்சிக்கு 2014-ம் ஆண்டு தேர்தலை விட தற்போது 8 இடங்கள் மட்டுமே கூடுதலாக கிடைத்துள்ளன. இதனால் காங்கிரஸ் கட்சிக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து 2-வது தடவையாக பறிபோய் உள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர்களில் 10 சதவீதம் இடங்கள் அதாவது 55 இடங்களைப் பெற்றால்தான் ஒரு கட்சியால் எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற முடியும். காங்கிரஸ் கட்சிக்கு அந்த இடத்தைப் பெற தற்போது 3 எம்.பி.க்கள் குறைவாக உள்ளனர். இது ராகுலை கடும் விரக்தியில் ஆழ்த்தியுள்ளது.
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்த ராகுல் ஓரிரு எம்.பி.க்களை வைத்திருக்கும் சிறிய கட்சிகளை காங்கிரசுடன் இணைத்து எதிர்க்கட்சி தலைவர் ஆகி விடலாம் என்று ஓசையின்றி முயற்சி செய்தார். ஆனால் எந்த கட்சியும் காங்கிரசுடன் இணைய மறுத்து விட்டன.
இதனால் மக்களவை காங்கிரஸ் தலைவர் பொறுப்பை ஏற்கவும் ராகுல் தயங்குகிறார். இந்த நிலையில் நேற்று பாராளுமன்றம் முன்பு பேசிய பிரதமர் மோடி, “பாராளுமன்ற ஜனநாயகத்தில் எதிர்க்கட்சிகளின் குரலுக்கு மரியாதை உண்டு. எனவே எண்ணிக்கை பற்றி கவலைப்படாமல் எதிர்க்கட்சிகள் ஜனநாயக கடமையாற்ற வேண்டும்” என்றார்.
ஆனால் பா.ஜனதா மூத்த தலைவர்கள் இந்த விஷயத்தில் அரசியலமைப்பு சட்டப்படி செயல்பட முடிவு செய்துள்ளனர். காங்கிரஸ் கட்சிக்கு தனிப்பட்ட முறையில் சலுகை காட்டக்கூடாது என்று முடிவு எடுத்துள்ளனர். அதன்படி காங்கிரசுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்தை மத்திய அரசு வழங்காது என்று பா.ஜனதா வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

