மோடி சொன்னதால் அணிகள் இணைந்ததா? - ஓ.பன்னீர்செல்வத்துக்கு பா.ஜனதா கண்டனம்

அ.தி.மு.க. அணிகள் இணைப்பு விவகாரத்தில் பிரதமர் மோடியை தொடர்புபடுத்தி ஓ.பன்னீர்செல்வம் பேசி இருப்பதற்கு பா.ஜனதா தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மோடி சொன்னதால் அணிகள் இணைந்ததா? - ஓ.பன்னீர்செல்வத்துக்கு பா.ஜனதா கண்டனம்
Published on

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சசிகலா அ.தி.மு.க. பொதுச்செயலாளரானார். அவர் முதல்-அமைச்சர் பதவியையும் கைப்பற்ற விரும்பினார்.

இதற்காக அப்போது முதல்-அமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. முதல்-அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த ஓ.பன்னீர் செல்வம் தர்மயுத்தம் தொடங்கினார்.

இதனால் அ.தி.மு.க. சசிகலா தலைமையில் ஒரு அணியாகவும், ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் மற்றொரு அணியாகவும் பிரிந்தது. சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா ஜெயிலுக்கு சென்ற பிறகு சசிகலா அணியை சேர்ந்த எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சர் ஆனார்.

சசிகலா குடும்பத்தை விலக்கி வைத்தபிறகு எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியும், ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் மற்றொரு அணியும் செயல்பட்டு வந்தது.

அ.தி.மு.க. அணிகள் பிரிந்த பிறகு ஓ.பன்னீர் செல்வம் பிரதமர் மோடியுடனும், பா.ஜனதா கட்சியினருடனும் நெருக்கமாக இருந்தார். டெல்லி சென்று பிரதமர் மோடியையும் அடிக்கடி சந்தித்தார்.

எடப்பாடி பழனிசாமியை விட ஓ.பன்னீர்செல்வம் மோடியுடன் அதிக நெருக்கமாக இருப்பதாக ஒரு தோற்றம் நிலவியது.

பிரதமர் மோடி மூலம் அ.தி.மு.க. அணிகளை இணைக்கும் முயற்சி நடப்பதாக அப்போது எதிர்க்கட்சிகள் கூறி வந்தன. அரசியலிலும் இது பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் இதை அ.தி.மு.க.வின் இரு அணியினரும் மறுத்தனர்.

இதற்கிடையே அ.தி.மு.க. இரு அணிகளும் ஒன்றாக இணைந்தன. ஓ.பன்னீர் செல்வத்துக்கு துணை முதல்-அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.

அ.தி.மு.க. அணிகள் இணைந்த பிறகு ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் வந்தது. இதில் அ.தி.மு.க.வுக்கு 2-வது இடமே கிடைத்தது.

இந்த தேர்தலுக்கு பிறகு அ.தி.மு.க-பா.ஜனதா இடையே உறவு நீடிக்கவில்லை. இரு கட்சி தலைவர்களிடையேயும் உரசல் போக்கு நிலவி வந்தது. அ.தி.மு.க. தலைவர்களும், பா.ஜனதா தலைவர்களும் ஒருவருக்கொருவர் மோதிக் கொள்ளும் வகையில் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தேனி மாவட்ட அ.தி.மு.க. செயல் வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகையில், “அ.தி.மு.க. அணிகள் இணைப்புக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினேன். அப்போது அவர் இந்த சூழ்நிலையில் கட்சியை காப்பாற்ற நீங்கள் இணைய வேண்டும் என்று என்னிடம் சொன்னார்.

சரி இணைந்து விடுகிறேன். எனக்கு அமைச்சர் பதவி வேண்டாம். கட்சி பதவியில் மட்டும் இருக்கிறேன் என்று நான் சொன்னேன். அதற்கு அவர் நீங்கள் அமைச்சர் பதவியில் இருக்க வேண்டும். அரசில் இருக்க வேண்டும் என்றார். அதனால்தான் இன்று நான் அமைச்சராக இருக்கிறேன்” என்று பேசினார்.

ஓ.பன்னீர்செல்வத்தின் இந்த பேச்சு அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக சென்னையில் நேற்று நடந்த சமூகநீதி பாதுகாப்பு மாநாட்டில் பேசிய மு.க.ஸ்டாலின், “அ.தி.மு.க. அணிகளை இணைப்பதற்கு மோடி கட்டப்பஞ்சாயத்து செய்துள்ளார்” என்று குற்றம் சாட்டினார்.

எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் அரசு பா.ஜனதாவின் கிளையாக செயல்படுகிறது என்றும், மத்திய அரசு ஆட்டுவிக்கின்றபடிதான் இந்த அரசு ஆடுகிறது என்றும் டி.டி.வி. தினகரன் அடிக்கடி கூறி வந்தார். ஓ.பன்னீர்செல்வம் தற்போது பேசியிருப்பது அதற்கு ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருப்பதுபோல் உள்ளது என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஓ.பன்னீர் செல்வத்தின் பேச்சுக்கு பா.ஜனதா தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஓ.பி.எஸ். பச்சை குழந்தை அல்ல. அவர் பழுத்த அரசியல்வாதி. தமிழகத்தின் முதல்வராக இருந்தவர். அவர் அந்த வார்த்தையை சொல்லி இருப்பது ஒரு மிகப்பெரிய ஆச்சரியத்தை தான் ஏற்படுத்தி உள்ளது.

நான் அ.தி.மு.க. தலைவர்கள் பலரிடம் ஏன் நீங்கள் சேர்ந்திருக்க கூடாது என்று பேசியுள்ளேன். ஆனால் நிச்சயமாக பிரதமர் மோடி இதுபோன்ற கருத்துக்களை சொல்லி இருப்பதற்கான வாய்ப்பு இல்லை என்பது என்னுடைய கருத்து.

இவ்வாறு அவர் கூறினார்.

தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:-

ரோட்டில் இரண்டு பேர் சண்டை போட்டுக் கொண்டிருந்தால் அதை பார்க்கும் பெரிய மனிதர் சண்டை போடாதீங்கப்பா, சமாதானமா போங்கப்பா என்றுதான் சொல்வார். அப்படித்தான் பிரதமர் மோடியும் துணை முதல்வரை சந்தித்தபோது சாதாரணமாக சொல்லியிருப்பார்.

தனிப்பட்ட முறையில் சாதாரணமாக பேசிக் கொள்வதையும் அரசியல் கண்ணோட்டத்தில் பார்க்க முடியாது. துணை முதல்வர் என்ன எண்ணத்தில் பேசினார் என்று தெரியவில்லை. இதைப்பற்றி வேறு எதுவும் சொல்வதற்கில்லை.

பிரதமர் மோடி கட்டப்பஞ்சாயத்து செய்து இருக்கிறார் என்று மு.க.ஸ்டாலின் பேசி இருக்கிறார். பொறுப்புள்ள ஒரு அரசியல் கட்சி தலைவர் பிரதமரை பற்றி இப்படி விமர்சிப்பது அழகல்ல.

சகோதரர் ஸ்டாலின் குடும்ப பஞ்சாயத்தே பெரும் பஞ்சாயத்தாக நடந்து கொண்டிருப்பதால் வீட்டு பஞ்சாயத்து போலவே நாட்டையும் நினைத்து விட்டார் போலும். வீட்டை விட்டு வெளியே வந்த பிறகு நாட்டு நினைப்போடு பேசுவதுதான் தலைவர்களுக்கு அழகு.

இவ்வாறு அவர் கூறினார்.

பிரதமர் மோடியை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்தபோது அவர்களுக்குள் என்ன பேசிக் கொண்டார்கள் என்பது எனக்கு தெரியாது.

ஒருவேளை ஓ.பி.எஸ். சொல்லி இருப்பதுபோல் இணைந்து செயல்பட ஆலோசனை வழங்கி இருந்தால் அது சரியானது. நியாயமானது.

ஏனென்றால் பல பேர் அ.தி.மு.க.வை பிளவுபடுத்த பா.ஜனதா முயற்சிப்பதாகத்தான் அப்போது குற்றம் சாட்டினார்கள். ஆனால் இணைந்து செயல்பட அறிவுரை கூறினார் என்பதன் மூலம் பா.ஜனதா மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு பொய் என்பது நிரூபணம் ஆகி இருக்கிறது.

எந்த கட்சியையும் பிளவுபடுத்தி குளிர்காய பா.ஜனதா விரும்பாது. ஆனால் மற்ற கட்சிகள் பிளவுபடுத்தி அரசியல் நடத்துபவை.

அவர்கள் கட்சியின் நன்மைக்காக ஆலோசனை சொல்லி இருக்கலாம். ஆலோசனை, அறிவுரை வழங்க எல்லோருக்கும் உரிமை உண்டு. கேட்பதும், கேட்காததும் அவர்கள் விருப்பம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா இது பற்றி கூறும்போது, “பிரதமர் மோடி எதுவும் உறுதிப்படுத்தவில்லையே. எனவே இதில் வேறு எதுவும் சொல்வதற்கில்லை” என்றார்.

பா.ஜனதா துணை தலைவர் வானதி சீனிவாசன் கூறியதாவது:-

பிரதமரால்தான் இணைந் தோம் என்று ஓ.பி.எஸ். தனது உள்ளத்தில் இருப் பதை வெளியே சொல்லியிருப்பதாக கூறி இருக்கிறார்.

முதல்-அமைச்சர் பதவி வகித்தவர். அவர் மீதான மதிப்பு, நம்பிக்கை நல்ல எண்ணத்தின் அடிப்படையில் அவர்களுக்குள் நடந்த உரையாடலின்போது ஆலோசனை வழங்கி இருக்கலாம். தனிப்பட்ட முறையில் நடந்த உரையாடல்களை இப்போது ஓ.பி.எஸ். பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

அ.தி.மு.க. அணிகள் இணைப்பு விவகாரத்தில் பிரதமர் மோடியை ஓ.பன்னீர்செல்வம் தொடர்புபடுத்தி இருப்பதும், அதற்கு பா.ஜனதா தலைவர்கள் ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிராக கருத்துக்களை தெரிவிப்பதும் அ.தி.மு.க. -பா.ஜனதா இடையே மோதல் வலுப்பதை உறுதி செய்வதாக அமைந்துள்ளது.

ஓ.பன்னீர்செல்வத்தின் பேச்சு அ.தி.மு.க.விலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவரது பேச்சுக்கு அமைச்சர்கள் கே.பி.அன்பழகன், ராஜேந்திரபாலாஜி ஆகியோர் மறுப்பு தெரிவித்துள்ளனர். இரட்டை இலையை மீட்கவே அ.தி.மு.க. அணிகள் இணைந்தன என்று அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறியுள்ளார்.

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறுகையில், “பிரதமர் மோடி கேட்டுக் கொண்டதால் தான் எடப்பாடி பழனிசாமி அமைச்சரவையில் சேர்ந்தேன் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசி இருப்பது யதார்த்தமானது. நிர்வாக ரீதியாக பிரதமர் கூறுவதை நாங்கள் கேட்போம். பா.ஜ.க.வுக்கும், அ.தி. மு.க.வுக்கும் அரசாங்க ரீதியான உறவுதான் உள்ளது. ஆனால் அரசியல் ரீதியான உறவு கிடையாது.

பா.ஜ.க.வுடன் அரசியல் கூட்டணி அமைப்பது குறித்து, முதல்-அமைச்சரும், துணை முதல்-அமைச்சரும் தான் முடிவு செய்வார்கள்” என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com