ஆட்சியின் சாதனைகளை கூற முடியாதது தான் பாஜக,அதிமுக கூட்டணி - முக ஸ்டாலின்
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று கரூரில் உள்ள திருமாநிலையூரில் நடைபெற்ற பிரசாரப்பொது கூட்டத்தில் கலந்துக் கொண்டு, பாராளுமன்ற தேர்தலின் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜோதிமணியை ஆதரித்து பேசியதாவது:
இந்த கரூர் தொகுதியிலே காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஜோதிமணியை எதிர்த்து அதிமுகவைச் சேர்ந்த அமைச்சர் தம்பிதுரை போட்டியிடுகிறார். இதே தம்பிதுரை, பாஜகவுக்கும், மோடிக்கும் எதிராக எப்படியெல்லாம் குற்றம் சாட்டி பேசினார் என நன்றாகவே தெரியும். இந்த அதிமுக அரசு, ஜிஎஸ்டி வரியில் பங்கு கேட்பதில் மாநில அரசுகள் பிச்சை எடுக்கும் நிலையில் உள்ளது.
கரூர் மக்கள் தம்பிதுரைக்கு தகுந்த பாடம் கற்றுத்தர வேண்டும். வாக்காளர்களை மதிக்காமல் செயல்படுபவர் அதிமுக வேட்பாளர் தம்பி துரை. இது 2 தினங்களுக்கு முன், வாக்காளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு அலட்சியமாக பதிலளிக்கும் போதே உறுதியானது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுடன் சேர்த்து 8 வருடங்கள் அதிமுக ஆட்சியில் இருக்கிறது.
ஆட்சியின் சாதனைகளை சொல்ல முடியாதவர்கள் தான் இந்த பாஜக- அதிமுக கூட்டணி. அடுத்த ஆண்டுக்கான நீட் தேர்வுக்கு வேலை நடைபெறுகிறது. ஆனால் நீட்டிற்கு விதிவிலக்கு என தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளனர். இது எப்படி சாத்தியமாகும்?
பிரதமர் மோடியின் பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டியால் மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜிஎஸ்டி யை எளிமையாக்கவும், பெட்ரோல், டீசல் விலை கண்டிப்பாக கட்டுப்படுத்தப்படும் எனவும் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை உறுதி செய்துள்ளது. மேலும் மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணப்படும் எனவும் ராகுல் காந்தி சொல்லியுள்ளார்.

