

புதுடெல்லி:
ஜி.எஸ்.டி. அறிமுக விழாவை கொண்டாடும் வகையில் பாராளுமன்றத்தின் சிறப்பு கூட்டம் இன்று நள்ளிரவு 10.45 மணிக்கு கூடுகிறது. நாடு சுதந்திரம் அடைந்ததற்குப் பிறகு மேற்கொள்ளப்படும் முக்கிய வரி சீர்திருத்தமாக ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறை கருதப்படுகிறது.
நாடு சுதந்திரம் பெற்றதை நள்ளிரவில் அறிவித்தது போல் ஜி.எஸ்.டி. அறிமுக விழா நள்ளிரவில் நடத்தப்படுகிறது. பாராளுமன்றத்தின் மைய மண்டபத்தில் நடக்கும் சிறப்பு கூட்டத்தில் இரு சபைகளின் எம்.பி.க்கள் மத்தியில் பிரதமர் நரேந்திரமோடி உரை நிகழ்த்துகிறார். ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, துணை ஜனாதிபதி ஹமீத்அன்சாரி, பாராளுமன்ற சபாநாயகர் சுமித்ரா மகாஜன், மத்திய மந்திரிகள் மற்றும் சில மாநில முதல்வர்கள் கலந்து கொள்கிறார்கள்.
இந்நிலையில், ஜி.எஸ்.டி அறிமுக விழாவில் பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் பங்கேற்கமாட்டர் என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இருப்பினும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் சார்பில் பீகார் அமைச்சர் விஜேந்திர யாதவ் பங்கேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, விழாவில் கலந்து கொள்ளுமாறு அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களுக்கும் மத்திய அரசு அழைப்பு விடுத்தது. ஆனால் காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய கட்சிகள் புறக்கணிக்க முடிவு செய்துள்ளன.
ஜனாதிபதி தேர்தலில் 17 எதிர்க்கட்சிகள் பா.ஜ.க. கூட்டணி வேட்பாளருக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், நிதிஷ்குமார் மட்டும் ஆதரவு தெரிவித்து இருந்தார். இருப்பினும் நிதிஷ் குமார் தனது முடிவை வாபஸ் பெற வேண்டும் என்று லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்ட பலர் வலியுறுத்தி வருகின்றனர்.
இத்தகைய நிலையில், இன்று நள்ளிரவு நடைபெறவுள்ள ஜி.எஸ்.டி. அறிமுக விழாவில் நிதிஷ்குமார் பங்கேற்காமல் தவிர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.