

பாட்னா:
பீகார் மாநிலத்தில் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம்-பாரதிய ஜனதா கூட்டணி ஆட்சி நடை பெற்று வருகிறது.
இந்த ஆண்டு இறுதியில் பீகார் சட்டசபை பதவி காலம் முடிவடைகிறது. அங்கு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் தேர்தல் நடத்தப்படுகிறது.
அந்த கட்சி பா.ஜனதாவுடன் தொடர்ந்து கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறது. சமீபத்தில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இருந்த அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர், பவன் வர்மா ஆகியோர் நீக்கப்பட்டனர்.
இது தேர்தலை பாதிக்காத வகையில் அனைத்து முன்னேற்பாடுகளையும் நிதிஷ் குமார் செய்து வருகிறார்.
2015-ம் ஆண்டு தேர்தலின்போது மது விலக்கு கொண்டு வரப்படும் என்று நிதிஷ்குமார் உறுதி அளித்தார். லாலு மற்றும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்த அவர் பிறகு 10 மாதத்தில் அந்த கூட்டணியில் இருந்து வெளியேறி பா.ஜனதாவுடன் இணைந்தார்.
2016-ம் ஆண்டு அவர் மதுவிலக்கை கொண்டு வந்தார். இது பெண்கள் மற்றும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று இருந்தது.
இதைத் தொடர்ந்து நிதிஷ் குமார் மது விலக்கை அப்படியே நீட்டிக்க செய்ய முடிவு செய்துள்ளார். பெண்கள் வாக்குகளை கவர அவர் இந்த முடிவை மேற்கொண்டுள்ளார். டெல்லியில் நடந்த கூட்டத்தில் அவர் இதை நாடு முழுவதும் கொண்டு வர வலியுறுத்தினார்.
வர இருக்கும் தேர்தலில் மது விலக்கு நீட்டிப்பு நிதிஷ் குமாருக்கு கை கொடுக்கும் என்று அரசியல் நோக்கர்கள் எதிர்பார்க்கிறார்கள். குடியுரிமை சட்ட திருத்தம் எதிர்ப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் பா.ஜனதா கூட்டணிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதை சரிகட்டும் வகையில் நிதிஷ்குமார் இந்த முடிவை எடுத்துள்ளார்.