நாடு முழுவதும் ரூ.1,833 கோடி பினாமி சொத்துகள் முடக்கம் - வருமான வரித்துறை நடவடிக்கை

கடந்த மாதம் வரை ரூ.1,833 கோடி மதிப்புள்ள பினாமி சொத்துகளை வருமான வரித்துறை முடக்கியிருப்பதாக மத்திய நேரடி வரிகள் வாரிய தலைவர் சுஷில் சந்திரா நேற்று தெரிவித்தார்.
நாடு முழுவதும் ரூ.1,833 கோடி பினாமி சொத்துகள் முடக்கம் - வருமான வரித்துறை நடவடிக்கை
Published on

புதுடெல்லி:

கருப்பு பணத்துக்கு எதிரான நடவடிக்கையின் ஒரு பகுதியாக பினாமி சொத்துகளை ஒழிக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாக பினாமி சொத்துகள் சட்டத்தில் திருத்தமும் மேற்கொள்ளப்பட்டது. பினாமி சொத்துகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ள பிரதமர் மோடி, பினாமி சொத்து வைத்திருப்போர் யாரும் தப்பிக்க முடியாது என சமீபத்தில் கூட கூறியிருந்தார்.

அதன்படி நாடு முழுவதும் கோடிக்கணக்கான மதிப்புடைய பினாமி சொத்துகள் முடக்கப்பட்டு வருகின்றன. கடந்த மாதம் வரை ரூ.1,833 கோடி மதிப்புள்ள பினாமி சொத்துகளை வருமான வரித்துறை முடக்கியிருப்பதாக மத்திய நேரடி வரிகள் வாரிய தலைவர் சுஷில் சந்திரா நேற்று தெரிவித்தார்.

இதில் ஆமதாபாத் மண்டலத்தில் 136, போபாலில் 93, கர்நாடகா மற்றும் கோவாவில் 76, சென்னையில் 72 என மொத்தம் 541 முடக்கங்கள் நிகழ்ந்துள்ளன. இது தொடர்பாக 517 நோட்டீசுகளும் அனுப்பப்பட்டு இருக்கின்றன.

தங்கள் தொடர்ச்சியான செயல்திட்டம் மூலம் பினாமி சொத்துகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறிய சுஷில் சந்திரா, இந்த விசாரணை தொடரும் என்றும் தெரிவித்தார். பினாமி சொத்துகள் குறித்த ஏராளமான தரவுகள் மற்றும் தகவல்கள் தங்களிடம் இருப்பதாகவும், இது குறித்த மேலதிக தகவல்களை பெற்று சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com