

திருப்பூர்:
திருப்பூருக்கு வந்த ‘டிராபிக்’ ராமசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
திருப்பூர் பல்லடம் ரோட்டில் கட்டப்பட்டு வரும் உயர்மட்ட பாலம் குறித்து தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பினேன். ஒரு கிலோ மீட்டருக்கு கட்ட வேண்டிய பாலத்தை சிலருக்கு சாதகமாக 400 மீட்டருக்குள் முடித்து விட்டனர்.
குறிப்பாக முறையாக திட்ட மிடப்படாமல் கட்டப்பட்டு வரும் பாலத்தால் கடும் நெரிசல் ஏற்படுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது வழக்கு தொடுப்பேன்.
நல்ல திறமையுள்ள ஜெயலலிதாவை சாகடித்து விட்டனர். தற்போது இருப்பது மக்களுக்கான அரசே இல்லை.
ரஜினிகாந்த் தைரிய சாலியாக இருந்திருந்தால் எப்போதோ அவர் அரசியலுக்கு வந்திருக்க வேண்டும். ரஜினி சினிமாவோடு இருக்கட்டும். மக்கள் நன்றாக இருக்க வேண்டும் என்றால் அவர் அரசியலுக்கு வரக்கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக டிராபிக் ராமசாமி திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்துக்கு வந்தார். அங்கு வைக்கப்பட்டிருந்த சாதனை விளக்க பிளக்ஸ் பேனரை உடனே அகற்ற வேண்டும் என்று ஊழியரிடம் கூறினார்.
அப்போது அந்த ஊழியர் , என்ன பதில் சொல்வது? என்று திணறினார். பின்னர் அவர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசினார்.
இதைதொடர்ந்து அதிகாரிகள் உத்தரவின் பேரில் பேனர்கள் அப்புறப்படுத்தப்பட்டன. அதன் பின்னரே டிராபிக் ராமசாமி அங்கிருந்து கிளம்பி சென்றார்.