

தண்டராம்பட்டு:
திருவண்ணாமலை மாவட்டம் தானிப்பாடி அடுத்த போந்தை கிராமத்தை சேர்ந்த ராமசாமி மகன் ஞானசேகரன் (வயது55). விவசாயி. இவர் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு சாத்தனூரில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கிளையில் விவசாய கடன் திட்டத்தில் டிராக்டர் வாங்கினார்.
தொடர்ந்து 4 ஆண்டுகளாக தவணை தொகையை செலுத்தி வந்தார். இந்நிலையில் கடும் வறட்சி காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக தவணை தொகையை செலுத்த முடியாமல் விரக்தியில் இருந்துள்ளார்.
இதற்கிடையில், சம்பந்தப்பட்ட வங்கி நிர்வாகம் வாராக்கடன் பட்டியலில் ஞானசேகரன் பெயரை சேர்த்தது. மேலும் கடன் தொகை வசூலிக்கும் பொறுப்பை தனியார் ஏஜென்சியிடம் ஒப்படைத்துள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில் நேற்று மாலை வங்கி ஊழியர்கள் மற்றும் தனியார் குழு என 4 பேர் ஞானசேகரன் வீட்டிற்கு வந்தனர். அவர்கள் வங்கி கடனை வசூலிக்கும் பொறுப்பு தங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதால் டிராக்டரை ஜப்தி செய்யப் போவதாக தெரிவித்தனர்.
இதனால், அதிர்ச்சியடைந்த விவசாயி ஞானசேகரன் நெல் அறுவடை முடிவடைந்ததும் 2 மாதங்களில் தவணை தொகையை செலுத்துவதாக கூறியுள்ளார். அதை ஏற்க மறுத்த அவர்கள் டிராக்டரை ஜப்தி செய்ய முயன்றனர்.
இதில் ஞானசேகரன் மற்றும் ஊழியர்களிடையே கடும் வாக்கு வாதம் ஏற்பட்டது. மேலும் தள்ளு முள்ளு ஏற்பட்டது. அப்போது ஞானசேகரன் திடீரென மயங்கி விழுந்தார். அவரை குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் மீட்டு தானிப்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றிரவு 10 மணி அளவில் ஞானசேகரன் பரிதாபமாக இறந்தார்.
தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் ஞானசேகரன் தாக்கப்பட்டாரா? அல்லது வேறுகாரணமா? என்பது குறித்து தானிப்பாடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.