வங்கி கடன், வரி ஏய்ப்பு மூலம் ரூ.6 ஆயிரம் கோடி மோசடி- தொழில் அதிபர் கைது

வங்கி கடன், வரி ஏய்ப்பு மூலம் ரூ.6 ஆயிரம் கோடி மோசடி- தொழில் அதிபர் கைது

இமாச்சலபிரதேசத்தில் வங்கி கடன், வரி ஏய்ப்பு, மின் கட்டண பாக்கி மூலம் ரூ.6 ஆயிரம் கோடி மோசடி செய்த தொழில் அதிபரை போலீசார் கைது செய்தனர்.
Published on

சிம்லா:

இமாசலபிரதேச மாநிலத்தில் பான்டாசாகிப் என்ற பகுதியில் உள்ள ஜெகத்பூர் கிராமத்தில் இந்தியன் டெக்னோமேக் என்னும் நிறுவனத்தை வினய்குமார் சர்மா என்பவர் நடத்தி வந்தார்.

இவர் ஐ.ஏ.எஸ். அதிகாரி. எம்.எல்.சர்மா என்பவரின் மகன் ஆவார்.

இந்தியன் டெக்னோமேக் நிறுவனம் மூலம் பல்வேறு விதமான தொழில்நுட்ப கருவிகள் தயாரிக்கப்பட்டு வந்தது. இதற்காக வினய் குமார் சர்மா பல்வேறு வங்கிகளில் 2,167 கோடி ரூபாய் கடன் வாங்கினார். அந்த பணத்தை அவர் திரும்ப செலுத்தவில்லை.

இந்த நிலையில் அவர் தனது ஊழியர்களுக்கு ஒழுங்காக மாத சம்பளம் கொடுப்பதில்லை என்ற புகார் எழுந்தது. மேலும் அவர் மின் கட்டண பாக்கி வைத்திருப்பதாகவும் கூறப்பட்டது.

இதையடுத்து கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு அவரது நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது வினய்குமார் சர்மா ரூ.2,175 கோடி அளவுக்கு வரி ஏய்ப்பு செய்திருப்பது தெரிய வந்தது.

அவர் மீது நடவடிக்கை எடுக்க இமாச்சலபிரதேச அரசு உத்தரவிட்டது. இதை யடுத்து வினய்குமார் சர்மா தனது தொழிற்சாலையை மூடி விட்டு தலைமறைவாகி விட்டார்.

சமீபத்தில் தொழில் அதிபர் நிரவ்மோடி ரூ.12 ஆயிரம் கோடி மோசடி செய்து இருப்பதாக தகவல்கள் வெளியான போது வினய்குமார் சர்மா பற்றியும் பரபரப்பு தகவல்கள் வெளியானது. வினய்குமார் சர்மா மொத்தத்தில் ரூ.6 ஆயிரம் கோடிக்கு மோசடி செய்து இருப்பது தெரிய வந்தது.

வரி ஏய்ப்பு, கடன் பாக்கி, சம்பள பாக்கி, ஓய்வூதிய பணத்தில் மோசடி, விற்பனை வரியில் மோசடி, மின் கட்டணத்தில் மோசடி என்று அனைத்திலும் வினய்குமார் சர்மா கைவரிசை காட்டி இருப்பது உறுதியானது.

இமாசலப்பிரதேச போலீசார் அவரை தேடி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று அவர் போலீசாரிடம் சிக்கினார். அவரை போலீசார் பாண்டா சாகிப் நகர கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். 24-ந்தேதி வரை அவரை காவலில் வைக்க கோர்ட்டு உத்தரவிட்டது.

அவரை போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com