பாகூர் அருகே அரசு ஊழியரை கொல்ல முயன்ற வாலிபர் கைது

பாகூர் அருகே அரசு ஊழியரை கொல்ல முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
பாகூர் அருகே அரசு ஊழியரை கொல்ல முயன்ற வாலிபர் கைது
Published on

பாகூர்:

பாகூர் அருகே கீழ்பரிக்கல்பட்டு கிராமத்தில் 100 நாள் திட்ட பணி நடந்து வருகிறது. அந்த பணிகளை அரியாங்குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் சூப்பர் வைசராக பணிபுரிந்து வரும் அதே பகுதியை சேர்ந்த முருகேசன் மேற்பார்வையில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் நேற்று காலை 100 நாள் திட்ட பணியை முருகேசன் மேற்பார்வையிட்டு கொண்டு இருந்த போது, அந்த பகுதியை சேர்ந்த பகவதி ராஜா (வயது 22) என்பவர் தனது தாய் பாஞ்சாலிக்கு ஏன் 100 நாள் திட்ட பணி வழங்கவில்லை என கேட்டு தகராறு செய்தார்.

இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அங்கிருந்தவர்கள் இருவரையும் சமாதானம் செய்து பசுபதி ராஜாவை அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

நேற்று மாலை பணி முடிந்த பின்னர் முருகேசன் வீட்டில் இருந்தார். அப்போது பசுபதி ராஜாவின் அண்ணன் விஸ்வநாதன்(25) கத்தியுடன் முருகேசன் வீட்டுக்கு வந்தார். அவரிடம் தனது தாய்க்கு 100 நாள் திட்ட பணி வழங்காமல் எனது தம்பியிடம் தகராறு செய்கிறாயா? என கேட்டு கத்தியுடன் முருகேசனை கொல்ல பாய்ந்தார்.

உடனே சுதாரித்துக் கொண்ட முருகேசன் இது பற்றி போன் மூலம் பாகூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

உடனே அங்கு ரோந்து பணியில் ஈடுபட்ட பாகூர் போலீசார் விரைந்து வந்த விஸ்வநாதனை மடக்கி பிடித்து கைது செய்தனர். அவரிடம் இருந்த கத்தியையும் பறிமுதல் செய்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து பசுபதி ராஜாவையும் தேடி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com