அக்டோபர் 18-க்கு பிறகு ஒரு நாள் கூட அவகாசம் கிடையாது: அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் உறுதி

அயோத்தி வழக்கில் வாதங்களை முன்வைக்க அக்டோபர் 18-ம் தேதிக்கு பிறகு ஒரு நாள் கூட கால அவகாசம் தர முடியாது என உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது.
உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்
Published on

அயோத்தி வழக்கில் அலகாபாத் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட மேல் முறையீட்டு மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. உச்ச நீதிமன்றத்தில் கடந்த மாதம் 6-ம் தேதி முதல் தினசரி அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது. அக்டோபர் 18-ம் தேதிக்குள் வாதங்களை முடித்துக்கொள்ள நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு இந்த வழக்கை விசாரித்து வருகிறது. கடந்த திங்கள் முதல் கூடுதலாக ஒரு மணி நேரம் விசாரணை நடைபெறுகிறது.

நேற்று நடைபெற்ற வாதத்தின்போது, 2003ம் ஆண்டு தொல்லியல் துறை வெளியிட்ட அறிக்கைக்கு இஸ்லாமிய அமைப்புகள் தரப்பு ஆட்சேபம் தெரிவித்தது.

இந்நிலையில், அயோத்தி வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தொல்லியல் துறை அறிக்கை மீது ஆட்சேபம் தெரிவித்து, நீதிமன்ற நேரத்தை வீணடித்திருந்தால், மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம் என இஸ்லாமிய அமைப்புகள் தரப்பு தெரிவித்தது.

தொல்லியல் துறை அறிக்கை மீது கேள்வி கேட்கும் உரிமையை இஸ்லாமிய அமைப்புகள் தரப்பு வழக்கறிஞர் இழக்கவில்லை. ஆனால், நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னர் ஆதாரங்களை மதிப்பிட முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர்.

அயோத்தி வழக்கில் அக்டோபர் 18-ம் தேதிக்குள் வாதங்களை முடிக்க வேண்டும் என மீண்டும் சுட்டிக் காட்டிய நீதிபதிகள், அதற்கேற்ப இந்து மற்றும் முஸ்லிம் தரப்புகள் தங்கள் வாதங்களை முடிப்பதற்கான கால அளவை குறிப்பிட வேண்டும் என தெரிவித்தனர்.

அக்டோபர் 18-ம் தேதிக்கு பிறகு வாதங்களை முன்வைக்க ஒருநாள்கூட அவகாசம் தர முடியாது, இந்த வழக்கில் நான்கு வாரங்களில் தீர்ப்பு வழங்கினால் சிறப்பாக இருக்கும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com