

ஆற்காடு:
ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரம் ஹாஜிபேட்டையை சேர்ந்தவர் நிக்கால். இவரது சகோதரிக்கு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.
இதற்காக அவர் விருந்து வைத்தார். தனது நண்பர்கள் ஆரிப் (வயது20). சையத் (20), கரிமுல்லா (19) துபெயில் அகமது (19), கலீம் (20), முபாரக் (20), இதயத்துல்லா (20), மற்றொரு ஆரிப் (18), சையத் (21), நியாஸ் (18), ஜபருல்லா (19) ஆகிய 11 பேருடன் நேற்று இரவு ஆற்காடு அருகே உள்ள பஞ்சபாண்டவர் மலைக்கு ஆட்டோவில் சென்றனர். ஆட்டோவை ஆரிப் ஓட்டி சென்றார். நிக்கால் தனியாக சென்றார்.
அங்கு விருந்து முடித்து விட்டு நள்ளிரவு 1 மணியளவில் ஆட்டோவில் மீண்டும் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.
மேல்விஷாரம் கத்தியவாடி ரோட்டில் வந்த போது நிலை தடுமாறிய ஆட்டோ தோல் தொழிற்சாலை காம்பவுண்டு சுவர் மீது மோதி கவிழ்ந்தது. இதில் ஆட்டோ நொறுங்கியது. இடிபாடுகளில் சிக்கி சையத், கரிமுல்லா, கலீம், துபெயில் அகமது ஆகியோர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
முபாரக், இதயதுல்லா, சையத், நியாஸ், ஜபருல்லா உள்பட 7 பேர் படுகாயமடைந்தனர். அங்கிருந்தவர்கள் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக வாலாஜா அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
ஆற்காடு டவுன் இன்ஸ்பெக்டர் ஆனந்தன், சப்-இன்ஸ்பெக்டர் அருண்ராஜ்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விபத்தில் பலியானவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
படுகாயம் அடைந்தவர்கள் மேல்சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை, தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து ஆற்காடு டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒரே பகுதியை சேர்ந்த நண்பர்கள் 4 பேர் விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.