

வேலூர்:
வேலூர் தோட்டப்பாளையம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சேட்டு. ஆட்டோ டிரைவர். இவரது ஆட்டோவில் நேற்றிரவு 10.30 மணி அளவில் வடமாநில தம்பதி தனது மகனுடன் வேலூரில் இருந்து காட்பாடிக்கு சென்றனர். ஆட்டோவில் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பயணம் செய்தார்.
காட்பாடி ரெயில் நிலையம் அருகே ஆட்டோ சென்றபோது, காட்பாடியில் இருந்து வேலூர் நோக்கி சென்ற தனியார் பஸ் திடீரென ஆட்டோ மீது மோதியது. இந்த விபத்தில் ஆட்டோவில் இருந்த 45 வயது மதிக்கத்தக்க நபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் காட்பாடி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஆட்டோவில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சேட்டு, வடமாநில தம்பதி மற்றும் அவர்களது மகனை பொதுமக்கள் உதவியுடன் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனையடுத்து போலீசார் ஆட்டோவையும், பஸ்சையும் அப்புறப்படுத்தி போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர். விபத்தில் இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து காட்பாடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews