ஆஸ்திரேலியாவில் ரூ.1.87 கோடி தங்க கட்டிகள் கண்டெடுப்பு

ஆஸ்திரேலியாவில் பிரெண்ட் ‌ஷானன், ஈதன் வெஸ்ட் என்னும் 2 பேர், பூமியில் தங்க வேட்டையில் ஈடுபட்டிருந்த போது ரூ.1.87 கோடி மதிப்புள்ள 2 தங்க கட்டிகளை கண்டெடுத்தனர்.
தங்க கட்டி
தங்க கட்டி
Published on

சிட்னி:

ஆஸ்திரேலிய நாட்டில் விக்டோரியா மாகாணத்தில் தர்ணகுல்லா என்ற நகரம், தங்க சுரங்க நகரமாகும்.

இங்கு பிரெண்ட் ‌ஷானன், ஈதன் வெஸ்ட் என்னும் 2 பேர், பூமியில் தங்க வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் மெட்டல் டிடெக்டர் கருவி கொண்டு அங்குள்ள ஒரு இடத்தில் தங்கத்தை தேடிக்கொண்டிருந்தனர். அப்போது குறிப்பிட்ட ஒரு இடத்தை அவர்கள் தோண்டியபோது, அதில் 2 தங்க கட்டிகளை கண்டெடுத்தனர். அந்த கட்டிகள் இரண்டும் சேர்த்து 3½ கிலோ எடை இருந்தன. அவற்றின் மதிப்பு 2½ லட்சம் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.1 கோடியே 87 லட்சம்) ஆகும். இந்த கண்டுபிடிப்பு நேற்று முன்தினம் ஒளிபரப்பப்பட்ட ஆஸி கோல்டு ஹண்டர்ஸ் என்ற டி.வி. நிகழ்ச்சியில் காட்டப்பட்டது.

இதுபற்றி ஈதன் வெஸ்ட் கூறும்போது, ‘‘இவை நிச்சயமாக மிக முக்கியமான கண்டுபிடிப்புகளில் ஒன்றாகும். ஒரே நாளில் இரண்டு பெரிய தங்க கட்டிகள் கிடைத்திருப்பது மிகவும் ஆச்சரியமான ஒன்றாக அமைந்துள்ளது’’ என குறிப்பிட்டார்.

ஆஸ்திரேலிய டி.வியில் சன் ரைஸ் என்ற நிகழ்ச்சியில் தோன்றிய பிரெண்ட் ‌ஷானன், ‘‘நாங்கள் இப்படிப்பட்ட ஒரு வாய்ப்புக்காகத்தான் காத்திருந்தோம். இந்த கட்டிகள் இதுவரை தோண்டப்படாத இடத்தில் இருந்து கிடைத்தன’’ என கூறினார்.

ஈதன் வெஸ்ட் கூறுகையில், ‘‘நாங்கள் 4 ஆண்டுகளாக நடத்திய தங்க வேட்டையில் ஆயிரக்கணக்கான சிறிய துண்டுகளை எடுத்து இருக்கிறோம்’’ என தெரிவித்தார்.

இந்த தங்க கட்டிகளுக்கு அவற்றின் உண்மையான மதிப்பை விட கூடுதலாக 30 சதவீதம் வரை கிடைக்கும் என டிஸ்கவரி சேனல் கூறியது. இந்த தங்க கட்டிகள் கண்டெடுப்பு, ஆஸ்திரேலியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com