

திருமலை:
கர்நாடக மாநிலம் எடிகா பகுதியை சேர்ந்தவர் தேவராஜ். இவர், பிழைப்பு தேடி கடந்த ஓராண்டுக்கு முன்பு தனது முதல் மனைவி உலகம்மா, 2-வது மனைவி ஜோதி, தாய் துர்காம்மாள் மற்றும் 3 குழந்தைகளுடன் திருப்பதிக்கு வந்தார்.
இதில் ஜோதியை தவிர மற்றவர்கள் கட்டிட பணிக்கு சென்றனர். ஜோதி மட்டும் வீட்டில் இருந்து தனது 7 வயது மகன் மற்றும் கணவரின் முதல் மனைவிக்கு பிறந்த 4 வயது மகள் ராதா உள்பட 3 குழந்தைகளையும் கவனித்து வந்தார்.
இந்த நிலையில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 26-ந் தேதி சிறுமி ராதாவுக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி ஜோதி ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். மாலையில் ஜோதி மட்டும் தனியாக வீடு திரும்பினார்.
மகள் ராதா எங்கே? என்று கணவர் உள்பட குடும்பத்தினர் கேட்டனர். அதற்கு ஜோதி, ஆஸ்பத்திரியில் ராதா தொலைந்து விட்டதாக கூறினார். இதையடுத்து, அனைவரும் சிறுமி ராதாவை தேடினர்.
எங்கு தேடியும் சிறுமி கிடைக்கவில்லை. இது குறித்து, திருமலை போலீசில் தந்தை தேவராஜ் புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார், மாயமான சிறுமியை தேடினர்.
ஆனால் மகள் கிடைக்காததால், பணி ஒப்பந்தம் முடிந்தவுடன், தேவராஜ் குடும்பத்துடன் சொந்த ஊரான எடிகாவுக்கு சென்று விட்டார். இந்த நிலையில், திருப்பதி எஸ்.பி. ஜெயலட்சுமி முடிக்கப்படாமல் நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து ஆய்வு செய்தார்.
அதில் சிறுமி ராதா காணாமல் போன புகார் இருந்தது. சந்தேகமடைந்த எஸ்.பி., சிறுமி மாயமான வழக்கு குறித்து விசாரணை நடத்த இன்ஸ்பெக்டர் துளசி ராமுக்கு உத்தரவிட்டார்.
அதன்படி, இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் எடிகா கிராமத்திற்கு சென்று தேவராஜ் குடும்பத்தினரை, திருப்பதிக்கு அழைத்து வந்து சந்தேகத்தின் பேரில் தனித்தனியாக கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.
இதில், சிறுமி ராதாவை கொலை செய்ததை அவரது சித்தி ஜோதி ஒப்புக்கொண்டார். விசாரணையில் தேவராஜை திருமணம் செய்வதற்கு முன்பே, எடிகாவை சேர்ந்த வேறொருவருடன் ஜோதிக்கு தொடர்பு இருந்தது.
திருமணத்திற்கு பிறகும், அந்த நபருடன் கள்ளத்தொடர்பு நீடித்தது. கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த கணவர் குடும்பத்தை ஒட்டு மொத்தமாக தீர்த்துக் கட்ட ஜோதி திட்டமிட்டார். முதலில் சிறுமி ராதாவை கொலை செய்ய திட்டம் போட்டார்.
ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்வதாக கூறி சிறுமியை கூட்டிச் சென்ற ஜோதி, திருப்பதியில் இருந்து பாப விநாசம் செல்லும் வழியில் உள்ள காட்டுப் பகுதியில் இரக்கிமின்றி உயிரோடு எரித்துக் கொன்றார்.
பிறகு எலும்புகளை குழி தோண்டி புதைத்தார். மற்றவர்களையும் உடனடியாக கொலை செய்தால் போலீசார் கண்டு பிடித்து விடுவார்கள் என்று கருதி சரியான நேரத்துக்காக காத்திருந்தார்.
ஆனால் அதற்குள் ஜோதி சிக்கிக் கொண்டார். காட்டுப் பகுதியில் புதைக்கப்பட்ட எலும்புகளை கைப்பற்றி, தடயவியல் ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் ஜோதியை கைது செய்து, திருப்பதி கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.