ரஜினிகாந்துடன் ஆடிட்டர் குருமூர்த்தி சந்திப்பு

நடிகர் ரஜினிகாந்தை துக்ளக் பத்திரிகை ஆசிரியர் குருமூர்த்தி சந்தித்து பேசினார். அரசியல் நிலைப்பாடு, உடல் நலம் குறித்து பேசப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஆடிட்டர் குருமூர்த்தி - ரஜினிகாந்த்
ஆடிட்டர் குருமூர்த்தி - ரஜினிகாந்த்
Published on

சென்னை:

நடிகர் ரஜினிகாந்த் எப்போது அரசியல் கட்சியை ஆரம்பிப்பார் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து வந்தவேளையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு சமூக வலைத்தளங்களில் வைரலாகிய கடிதம் ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த கடிதத்தில் “அமெரிக்காவில் உள்ள ஆஸ்பத்திரியில் ரஜினிக்கு நடந்த சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை குறித்து விவரிக்கப்பட்டு இருந்தது.

இந்த கடிதம் உண்மையா? இல்லையா? என்ற சர்ச்சை கிளம்பிய நிலையில், அதற்கு ரஜினிகாந்தே தனது டுவிட்டர் மூலம் முற்றுப்புள்ளி வைத்தார். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், அந்த கடிதத்தில் கூறப்பட்ட மருத்துவர்கள் கூறிய தகவல்கள் அனைத்தும் உண்மை என்றும், தகுந்த நேரத்தில் மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்து எனது அரசியல் நிலைப்பாட்டைப் பற்றி மக்களுக்குத் தெரிவிப்பேன்” என்றும் தெரிவித்து இருந்தார். இதைத்தொடர்ந்து ரசிகர்கள் சிலர் போயஸ் கார்டனில் உள்ள ரஜினி வீட்டு முன்பு குவிந்து, அவர் அரசியலுக்கு வர அழைப்பு விடுத்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

தகுந்த நேரத்தில் நிர்வாகிகளுடன் ஆலோசித்து அரசியல் நிலைப்பாடு குறித்து அறிவிப்பேன் என்று ரஜினிகாந்த் கூறியிருப்பது தான் அவரது ரசிகர்களுக்கு ஆறுதல் தரும் விஷயமாக இருப்பதாக கூறப்படுகிறது.

இத்தகைய சூழ்நிலையில், துக்ளக் ஆசிரியரும், ஆடிட்டருமான குருமூர்த்தி சென்னை போயஸ் கார்டனில் உள்ள இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்தை நேற்று இரவு 7 மணியளவில் நேரில் சந்தித்தார். அப்போது ரஜினியின் உடல் நலம், அரசியல் சூழல்கள், அரசியல் செயல் திட்டங்கள் குறித்து இருவரும் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக ஆலோசித்ததாக கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com