டெல்லி குளிருக்கு 44 பேர் பலி: கவர்னர் மீது கெஜ்ரிவால் பாய்ச்சல்

டெல்லியில் 44 பேர் குளிருக்கு பலியானதற்கு துணைநிலை கவர்னர் அனில் பைஜல் தான் காரணம் என்று டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார். #ArvindKejriwal
டெல்லி குளிருக்கு 44 பேர் பலி: கவர்னர் மீது கெஜ்ரிவால் பாய்ச்சல்
Published on

வட மாநிலங்களில் கடுமையான குளிர் நிலவுகிறது. தலைநகர் டெல்லியில் 4.2 டிகிரி செல்சியஸ் அளவுக்கு குறைந்து விட்டது.

டெல்லியில் கடந்த சில தினங்களாக நிலவி வரும் உறை பனியால் விமானம் மற்றும் ரெயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது.

குளிர் தாங்காமல் டெல்லியில் பலியானவர்களின் எண்ணிக்கை 44-ஐ தாண்டி உள்ளது.

44 பேர் குளிருக்கு பலியானதற்கு துணைநிலை கவர்னர் அனில் பைஜல் தான் காரணம் என்று டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் டுவிட்டரில் கூறி இருப்பதாவது:-

வீடுகள் இல்லாததால் குளிர் தாங்க முடியாமல் 44 பேர் பலியானதாக மீடியாக்கள் தெரிவிக்கின்றன. டெல்லியில் வீடு இல்லாதவர்களுக்கு நகர்புற தங்கும் வசதி மேம்பாட்டு வாரியம் மூலம் திட்டம் கொண்டு வரப்பட்டது.

எனது தலைமையிலான அரசு கொண்டு வந்த இந்த திட்டத்தை துணை நிலை கவர்னரால் நியமிக்கப்பட்ட தலைமை நிர்வாக அதிகாரி செயல்பட விடாமல் தடுத்து நிறுத்தி விட்டார். இதன் விளைவால் குளிர் தாங்காமல் டெல்லியில் 44 பேர் பலியாகி உள்ளனர்.


பயனற்ற அதிகாரியை கவர்னர் நியமித்து இருந்தார். அதிகாரியை நியமிக்கும்போது கவர்னர் என்னிடம் ஆலோசனை கேட்க மறுத்து விட்டார். அப்போது எப்படி அரசு நல்ல முறையில் செயல்பட முடியும்.

மத்திய அரசின் ஏஜெண்டாக செயல்படும் துணைநிலை கவர்னர்தான் 44 பேர் உயிர் பலிக்கு காரணம்.

இவ்வாறு கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

இதற்கு பா.ஜனதா பதிலடி கொடுத்துள்ளது. டெல்லி பா.ஜனதா தலைவர் மனோஜ்திவாரி இது தொடர்பாக கூறியதாவது:-

அரசு நிர்வாகத்தை நடத்தும் கெஜ்ரிவால் மேல்-சபை எம்.பி.க்களை நியமிக்க வேட்பாளர்கள் தேர்வில் காட்டிய ஆர்வத்தை டெல்லி மக்களை பாதுகாப்பதில் காட்டி இருக்கலாம். அப்படி செய்து இருந்தால் 44 உயிர்கள் பறிபோய் இருக்காது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com