

சென்னை:
சென்னை அரும்பாக்கத்தில் கடந்த 11-ந்தேதி சாலையில் நடந்து சென்ற மேனகா என்ற பெண்ணை தரதரவென இழுத்துச் சென்று செயின் பறிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
2 வாலிபர்களில் ஒருவர் மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டிச் சென்றார். பின்னால் அமர்ந்திருந்த வாலிபர் செயினை பறிக்கும் போதுதான் மேனகா சாலையில் இழுத்துச் செல்லப்பட்டார். இது தொடர்பாக கோயம்பேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
கேமரா காட்சிகளை ஆய்வு செய்து கொலையாளிகளின் உருவத்தை போலீசார் அடையாளம் கண்டனர். ஆனால் உடனடியாக அவர்கள் யார் என்பதை கண்டு பிடிக்க முடியவில்லை. இதனையடுத்து அண்ணாநகர் துணை கமிஷனர் டாக்டர் சுதாகர் உத்தரவின்பேரில் செயின்பறிப்பு கொள்ளை யர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.
கோயம்பேடு இன்ஸ்பெக்டர்கள் ராஜா, மில்லர், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் தீவிரமாக துப்பு துலக்கினர். கொள்ளையனின் புகைப்படத்தை புழல் சிறையில் கொடுத்து விசாரித்தனர். இதன் பின்னரே இந்த வழக்கில் குற்றவாளி அருண்குமார் கைது செய்யப்பட்டான். மேனகாவிடம் பறிக்கப்பட்ட 13 பவுன் செயினில் 6 பவுன் மட்டுமே இவனிடமிருந்து மீட்கப்பட்டது.
திருவல்லிக்கேணி அயோத்தியா நகரை சேர்ந்த அருண்குமார் மீது பல்வேறு செயின்பறிப்பு வழக்குகள் உள்ளன. 2 முறை குண்டர் சட்டத்தில் சிறை சென்று வந்துள்ளான்.
மேனகாவிடம் செயினை பறித்த போது மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டிச் சென்ற வாலிபரும் யார் என்பது அடையாளம் தெரிந்துள்ளது. அருண் குமாரின் கூட்டாளியான அவனை பிடிக்கவும் போலீசார் வலை விரித்துள்ளனர்.
மேனகாவிடம் பறிக்கப்பட்ட செயினில் மீதி 7 பவுன் ராஜாவிடம் உள்ளது. அவனையும் கைது செய்து செயினை மீட்க போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
செயின் பறிப்பு சம்பவங்களில் கணக்கு காட்டுவதற்காக செயல்படாமல், இது போன்று உண்மையான குற்றவாளிகளை கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. அப்போது தான் செயின் பறிப்பு குற்றங்களை தடுக்க முடியும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
அரும்பாக்கம் செயின் பறிப்பு சம்பவத்தில் குற்றவாளியை கைது செய்த தனிப்படை போலீசாரை கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன், கூடுதல் கமிஷனர் ஜெயராம், இணை ஆணையர் சந்தோஷ் குமார் உள்ளிட்டோர் பாராட்டினர். #tamilnews