

கோவை கவுண்டம்பாளையம் தொகுதி எம்.எல்.ஏ. ஆறுக்குட்டி நிருபர்களிடம் கூறியதாவது:-
முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு தமிழக அரசியலில் பல்வேறு மாற்றங்கள் நடந்து வந்து கொண்டிருக்கிறது.
நாங்கள் முன்னாள் முதல்-அமைச்சர் பன்னீர் செல்வம் தலைமையில் இயங்கி வருகிறோம்.
கடந்த 3 நாட்களுக்கு முன்பு டி.டி.வி. தினகரனை அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் நேரில் சந்தித்து பேசி உள்ளனர். ஆனால் அவர்கள் மரியாதை நிமித்ததமாக மட்டும் பேசியதாக கூறி உள்ளனர். ஆனால் அ.தி.மு.க.வில் 3 அணிகள் இருப்பது போன்ற நிலை உள்ளது.
எங்களால் இந்த ஆட்சிக்கு எந்த பங்கமும் வராது, அவ்வாறு வந்தாலும் உறுதுணையாக இருந்து காப்பாற்றுவோம் என ஓ.பன்னீர்செல்வம் கூறி இருக்கிறார். அதுவே எனது கருத்தாகும்.
எதிர்கட்சியினர் ஏதாவது குறை கூறி கொண்டே இருக்கிறார்கள். இந்த ஆட்சி கவிழ வாய்ப்பில்லை.
எம்.எல்.ஏ.க்கள் டி.டி.வி. தினகரனை சந்திப்பதால் அவர் முதல்-அமைச்சராக வாய்ப்பிருக்கிறதா? என கேட்கிறீர்கள். அவரால் முதல்-அமைச்சராக முடியாது. ஆட்சி மாற்றமும் ஏற்படாது.
இவ்வாறு அவர் கூறினார்.