

குடியாத்தம்,:
குடியாத்தத்தில் இந்து மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் அர்ஜூன் சம்பத் நிருபர்களிடம் கூறியதாவது:-
வேலூர் மாவட்டத்தில் வனத்துறைக்கு சொந்தமாக உள்ள பகுதிகளில் மத பிரசாரம் செய்யப்பட்டு, பாறைகளில் மத அடையாளங்கள் குறித்து வர்ணம் தீட்டப்பட்டு வருகிறது. மேலும் கிராமப்புற பகுதிகளில் அனுமதியின்றி மத பிரசாரம் நடைபெற்று வருகிறது. இதனை மாவட்ட நிர்வாகம் தடுத்து நிறுத்த வேண்டும்.
பாலாற்றில் தடுப்பணைகளை கட்டி தண்ணீரை சேமிக்க வழிவகை செய்ய வேண்டும். மாட்டு வண்டிகளில் மணல் அள்ள அனுமதிக்க வேண்டும்.
அவர்களின் வாழ்வாதாரங்களை பாதுகாக்க வேண்டும். அரசு கேபிள் டி.வி.க்கான ‘செட்டாப் பாக்ஸ்’ நிர்ணயித்த விலையை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனை அரசு தடுக்க வேண்டும்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ஜனநாயகப்படி நடக்கவில்லை. எனவே, அங்கு தேர்தலை ரத்து செய்ய வேண்டும். பின்னர் கவர்னரின் நேரடி பார்வையில் தேர்தலை நடத்த வேண்டும். நடிகர் கமல்ஹாசன் கலைப்பணி செய்தால் மட்டும் போதும். அவர் அரசியல் பேசாமல் அமைதியாக இருப்பது நல்லது.
நடிகர் ரஜினிகாந்த் அடுத்த மாதம் (ஜனவரி) புது கட்சி தொடங்குவது குறித்து அறிவிப்பார் என எதிர்பார்க்கிறோம். அவரது வருகை அரசியலில் புதிய மாற்றத்தை உருவாக்கும். அவர் அரசியலுக்கு வருவதை இந்து மக்கள் கட்சி வரவேற்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
அதைத்தொடர்ந்து ஆம்பூரில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்து மக்கள் கட்சி சார்பில் மாநிலம் முழுவதும் அனுமன்ஜெயந்தி விழாவையொட்டி ஊர்வலம், சிறப்பு வழிபாடுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாணியம்பாடி, திருப்பத்தூர் பகுதியில் அனுமன்ஜெயந்தி ஊர்வலம், கொடியேற்றும் நிகழ்ச்சிக்கு காவல்துறை தடை விதிக்கப்பட்டுள்ளதற்கு கண்டனம் தெரிவித்து கொள்கிறேன். கவர்னர் தமிழகம் முழுவதும் ஆய்வு செய்து வருவது வரவேற்கத்தக்கது.
சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணம் விளையாடி கொண்டிருக்கிறது. கவர்னர் ஆட்சியின் கீழ் ராணுவத்தின் கட்டுப்பாட்டில்தான் அங்கு தேர்தலை நடத்த முடியும். தற்போது நேர்மையாக தேர்தலை நடத்த முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.