திருப்பதியில் ஆர்ஜித சேவை டிக்கெட், லட்டு விலையை குறைக்க பரிசீலனை

திருப்பதியில் ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் மற்றும் லட்டு பிரசாதத்தின் விலையை குறைக்க பரிசீலனை செய்யப்படும் என்று அறங்காவலர் குழு தலைவர் கூறினார்.
புதிய அறங்காவலர் குழு தலைவர் புட்டா.சுதாகர் யாதவ் வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் ஆய்வு செய்தபோது எடுத்தபடம்.
புதிய அறங்காவலர் குழு தலைவர் புட்டா.சுதாகர் யாதவ் வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் ஆய்வு செய்தபோது எடுத்தபடம்.
Published on

திருமலை:

திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் புதிய அறங்காவலர் குழு தலைவராக பதவி ஏற்ற புட்டா.சுதாகர் யாதவ் திருமலை முழுவதும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது அவர், பக்தர்களின் பொருட்கள் பாதுகாப்பு வைப்பறை, வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ் ஆகியவற்றை பார்வையிட்டார்.

வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் தங்கி ஓய்வெடுக்கும் பக்தர்களுக்கு காபி மற்றும் டீ வினியோகம் செய்யும் அறைகளை பார்வையிட்டார். வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள கம்பார்ட்மெண்டுகள் தூய்மையாக உள்ளதா, அங்குள்ள மின் விசிறிகள் இயங்குகிறதா, மின்விளக்குகள் எரிகிறதா, கழிவறைகள், குளியல் அறைகள் ஆகியவை சுத்தமாக உள்ளதா? எனப் பார்வையிட்டார்.

வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் தங்கியிருந்த பக்தர்களிடம் புட்டா.சுதாகர் யாதவ் குறைகளை கேட்டார். அப்போது பக்தர்கள் கூறுகையில்:-

திருமலையில் நாங்கள் அதிக நேரம் தரிசனத்துக்காக தங்கி உள்ளோம். விரைவில் சாமி தரிசனத்துக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுங்கள், என்றனர். அதற்கு அதிகாரிகள், இலவச தரிசனத்தில் செல்லும் பக்தர்களை விரைவில் கோவிலுக்குள் அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இலவச தரிசனத்தில் செல்லும் பக்தர்களுக்குத்தான் நாங்கள் அதிக முன்னுரிமை வழங்குகிறோம் என்றனர்.

அப்போது புட்டா.சுதாகர் யாதவ் கூறுகையில்:-

இந்து தர்ம பிரசார பரி‌ஷத் சார்பில் இந்து மதத்தின் சிறப்புகளை பரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். இதுதொடர்பாக ஆன்மிக விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்படும். தர்ம பிரசாரமே எங்களின் லட்சியம். தனியார் வங்கிகளில் தேவஸ்தானம் முதலீடு செய்துள்ள பக்தர்களின் காணிக்கை பணம் தொடர்பாகவும், கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக கூறப்படும் ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள், லட்டு பிரசாதத்தின் விலையை குறைக்கவும் நடைபெற உள்ள அறங்காவலர் குழு கூட்டத்தில் விவாதித்து பரிசீலனை செய்யப்படும், என்றார்.

திருமலை-திருப்பதி தேவஸ்தான இணை அதிகாரி கே.எஸ்.சீனிவாசராஜு, என்ஜினீயர் ராமச்சந்திராரெட்டி, பறக்கும்படை அதிகாரி ரவீந்திராரெட்டி மற்றும் பலர் உடன் சென்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com