ஆசாரிப்பள்ளம் கொரோனா வார்டில் மேலும் ஒருவர் பலி- எண்ணிக்கை 7 ஆக உயர்வு

நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வார்டில் மேலும் ஒருவர் பலியானார். இதனால் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா
கொரோனா
Published on

நாகர்கோவில்:

நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சை அளிக்க தனி வார்டு அமைக்கப்பட்டு உள்ளது. வெளிநாடுகளில் இருந்து குமரி மாவட்டம் வந்து தனிமைப்படுத்தப்பட்டவர்களில் கொரோனா அறிகுறி உள்ளவர்கள் அந்த வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறார்கள். அவ்வாறு கொரோனா வார்டில் சிகிச்சை பெற்ற 3 பேர் ஏற்கனவே பலியாகி இருந்தனர்.

இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் கொரோனா வார்டில் 3 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். ராஜாக்கமங்கலம் துறையைச் சேர்ந்த 66 வயது முதியவர், திருவட்டார் பகுதியைச் சேர்ந்த 24 வயது வாலிபர், முட்டத்தைச் சேர்ந்த 2 வயது ஆண் குழந்தை ஆகியோர் பலியாகினர்.

பலியான 3 பேரும் கொரோனா பாதிப்பால் இறந்தார்களா? என்பது தெரியவில்லை. அவர்களின் ரத்த மாதிரி ஆய்வுக்காக அனுப்பப்பட்டு உள்ளது. அதன் முடிவு வந்த பிறகு தான் அவர்கள் எதனால் இறந்தார்கள்? என்ற விவரம் தெரியவரும்.

பலியான 3 பேருக்கும் பல்வேறு நோய் பிரச்சினைகள் இருந்ததாகவும், அதன் காரணமாக அவர்கள் இறந்து இருக்கலாம் எனவும் மருத்துவக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட மேலும் ஒருவர் இன்று காலை இறந்தார்.

கன்னியாகுமரி சுவாமி நாதபுரத்தைச் சேர்ந்த 55 வயது நபர், உடல் நலம் பாதிக்கப்பட்டு நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். நேற்று இரவு அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் அதிகமானது. இதைத்தொடர்ந்து அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் கொரோனா வார்டில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை இறந்தார்.

அவரது ரத்த மாதிரியும் சோதனைக்காக நெல்லையில் உள்ள ஆய்வுக்கூடத்துக்கு அனுப்பப்பட்டு உள்ளது. அதன்பிறகே அவர் கொரோனா தொற்றால் இறந்தாரா? என்ற விவரம் தெரியவரும்.

கன்னியாகுமரி நபரையும் சேர்த்து ஆசாரிப்பள்ளம் கொரோனா வார்டில் பலியானவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.

இதுகுறித்து ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி டீன் சுகந்தி ராஜகுமாரியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரி தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு பலியான வர்களின் ரத்தம் மற்றும் சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி உள்ளோம். பரிசோதனை முடிவுகள் இன்னும் வரவில்லை. இதுகுறித்து பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம்.

நேற்று ஒரே நாளில் 3 பேர் இறந்தனர். அவர்கள் வெவ்வேறு நோய் பாதிப்பால் பாதிக்கப்பட்டிருந்தனர்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com