ஆன்லைன் முறையில் தேர்வு நடத்த ஏற்பாடுகள் தயார்: அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

இறுதியாண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் தேர்வு நடத்த அனைத்து ஏற்பாடுகளும் தயார் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழகம்
அண்ணா பல்கலைக்கழகம்
Published on

சென்னை:

வருகிற செப்டம்பர் மாத இறுதிக்குள் பல்கலைக்கழக இறுதி செமஸ்டர் தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக்குழு (யூ.ஜி.சி.) அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் வழிகாட்டுதல்களை வழங்கியிருந்தது.

முன்னதாக கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் கடந்த மார்ச் முதல் அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. பல மாநிலங்கள் பள்ளி பொதுத்தேர்வுகளை ரத்து செய்துவிட்டன. இதேபோல், கல்லூரி தேர்வுகளையும் ரத்து செய்து, அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்துவிட்டன. ஆனால் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் படிக்கும் இறுதியாண்டு மாணவர்களையும் தேர்வு எழுதாமல் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க முடியாது என்று யூ.ஜி.சி. அறிவித்தது.

அத்துடன் செப்டம்பர் மாதத்திற்குள் கல்லூரி, பல்கலைக்கழகங்களின் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வு கட்டாயம் நடத்தப்படும் என்றும் அறிவித்தது. இதற்கு பல்வேறு மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. யூ.ஜி.சி.யின் இந்த முடிவை எதிர்த்து, பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 31 மாணவர்கள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.  இந்த வழக்கில் நீதிபதி அசோக் பூஷன் அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது.

அதில் பல்கலைக்கழக இறுதியாண்டு தேர்வுகளை நடத்த வேண்டும் என்றும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இறுதியாண்டு தேர்வுகளை மாநில அரசுகள் தள்ளி வைக்கலாம் என்றும் மாநில அரசுகள் தேர்வுகள் நடத்தாமல் மாணவர்களை தேர்ச்சி பெற வைக்காதீர்கள் என்றும் தனது தீர்ப்பில் தெரிவித்திருந்தது.

செமஸ்டர் தேர்வை நடத்த தடையில்லை என்ற சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழகம் புதிய அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளது.  இதன்படி, இறுதியாண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் தேர்வு நடத்த அனைத்து ஏற்பாடுகளும் தயார் என தெரிவித்துள்ளது.  இன்னும் ஒரிரு நாளில் தேர்வு தேதி அறிவிக்கப்படும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com