லோக்பால் சட்டம் கொண்டுவர வலியுறுத்தி நாளை உண்ணாவிரதம் - அன்னா ஹசாரே அறிவிப்பு

லோக்பால் சட்டத்தை கொண்டுவர வலியுறுத்தி சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே மகாராஷ்டிராவின் ரலேகானில் சித்தியில் நாளை காலை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்துள்ளார். #AnnaHazare #Lokpal #HungerStrike
லோக்பால் சட்டம் கொண்டுவர வலியுறுத்தி நாளை உண்ணாவிரதம் - அன்னா ஹசாரே அறிவிப்பு
Published on

மும்பை:

காந்தியவாதியும், சமூக ஆர்வலருமான அன்னா ஹசாரே லோக்பால் சட்டத்தை கொண்டு வரவும், லோக் ஆயுக்தாவை நியமிக்க வலியுறுத்தி தொடர்ந்து போராடி வருகிறார். லோக் ஆயுக்தாவை நியமிக்காவிட்டால் காந்தி பிறந்த தினமான கடந்த அக்டோபர் 2-ம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடத்துவேன் என அறிவித்தார்.

மத்திய மற்றும் மாநில அரசுகளின் பிரதிநிதியாக மராட்டிய மந்திரி கிரிஷ் மகாஜன், அன்னா ஹசாரேவை சந்தித்து அரசு எடுத்து வரும் நடவடிக்கை குறித்து விளக்கியதை தொடர்ந்து, தனது காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை ஒத்திவைத்தார்.

அப்போது பேசிய அவர், இனியும் மத்திய அரசு தாமதம் செய்தால் காந்தி நினைவு நாளான ஜனவரி 30ம் தேதி போராட்டம் நடத்துவேன் என தெரிவித்திருந்தார்.

இதற்கிடையே, லோக்பாலை வலியுறுத்தி சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே மகாராஷ்டிராவின் ரலேகானில் சித்தியில் ஜனவரி 30-ல் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக பிரதமர் அலுவலகத்துக்கு கடிதம் எழுதியிருந்தார்.

இந்நிலையில், சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே லோக்பாலை வலியுறுத்தி மகாராஷ்டிராவின் ரலேகானில் சித்தியில் நாளை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்து 5 ஆண்டுகள் ஆகியும் லோக்பால் சட்டம் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளில் தாமதப்படுத்தி வருகிறார். ஊழலுக்கு எதிரான மசோதாவை கொண்டு வரவேண்டும் என மோடி எண்ணியிருந்தால் அதற்காக 5 ஆண்டுகள் காத்திருக்க மாட்டார்.

எனவே, லோக்பால் சட்டம் கொண்டு வர வலியுறுத்தி எனது சொந்த கிராமமான ரலேகான் சிந்தியில் நாளை காலை 10 மணி முதல் உண்ணாவிரதம் இருக்கப் போகிறேன்.

எனது உண்ணாவிரதம் எந்த கட்சியையும் எதிர்த்தோ மற்றும் தனிப்பட்ட நபரை எதிர்த்தோ நடத்தப்படுவதில்லை. நாட்டின் நலனுக்காகவே உண்ணாவிரதம்  இருக்கப் போகிறேன் என தெரிவித்துள்ளார். #AnnaHazare #Lokpal #HungerStrike

X

Maalai Malar
www.maalaimalar.com