ஆண்டிப்பட்டி தொகுதியில் ரஜினிகாந்த் போட்டியிட வேண்டி ரசிகர்கள் பறவைக்காவடி

ஆண்டிப்பட்டி தொகுதியில் ரஜினிகாந்த் போட்டியிட வேண்டி அவரது ரசிகர்கள் பறவைக்காவடி எடுத்து நேர்த்தி கடன் செலுத்தினர்.
ஆண்டிப்பட்டி தொகுதியில் ரஜினிகாந்த் போட்டியிட வேண்டி ரசிகர்கள் பறவைக்காவடி
Published on

ஆண்டிப்பட்டி:

தமிழகத்தில் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு மிகப்பெரிய வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. இதனால் நடிகர்கள் ரஜினிகாந்த், கமலஹாசன், விஜய் ஆகியோர் அரசியலுக்கு வர வேண்டும் என அவரது ரசிகர்கள் சமீப காலமாக பலத்த ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

முதற்கட்டமாக ரஜினி காந்த் தனது அரசியல் பிரவேசம் குறித்து மேடையில் ரசிகர்களிடையே பேசினார். ஆனால் அப்போது போர் வரும்போது பார்த்துக்கொள்ளலாம் என்று கூறி விட்டார்.

அதன்பிறகு கமல் தனது அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்புகளையும் அரசுக்கு எதிரான கருத்துகளையும் தெரிவித்ததால் அவரை சுற்றியே பரபரப்பு பேச்சுகள் தொடர்ந்தது.

மிகப்பெரிய நடிகர்களின் அரசியல் பிரவேசம் எவ்வாறு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் ஆண்டிப்பட்டியில் ரஜினிகாந்த் ரசிகர்கள் சிறப்பு வழிபாடு செய்து தங்கள் விருப்பத்தை தெரிவித்தனர்.

ஆண்டிப்பட்டி ஊராட்சி அலுவலகம் முன்பு உள்ள செல்வவிநாயகர் கோவிலில் இந்த வழிபாடு நடைபெற்றது. ஆண்டிப்பட்டி நகர ரஜினிகாந்த் மன்ற தலைவர் முருகவேல் பறவைக்காவடி எடுத்து ஊர்வலமாக வந்தார்.

இந்த ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்து ஜக்கம்பட்டியில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் நிறைவடைந்தது. இது குறித்து ரசிகர் மன்ற நிர்வாகிகள் தெரிவிக்கையில், ரஜினிகாந்த் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருந்து வரும் சட்டசபை தேர்தலில் ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிட்டு தமிழக முதல்வராக வர வேண்டும். ஆண்டிப்பட்டி தொகுதி தமிழக அரசியல் வரலாற்றில் பல முக்கிய தலைவர்களை உருவாக்கியது. அதன் வரிசையில் ரஜினிகாந்தும் இந்த தொகுதியில் போட்டியிட்டால் அவர் வெற்றி பெறுவது நிச்சயம். அதற்காக அவரது ரசிகர்களாகிய நாங்கள் கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடத்தி பறவைக்காவடி எடுத்து ஊர்வலம் வந்துள்ளோம் என்று தெரிவித்தனர்.

இந்நிகழ்ச்சியில் மன்ற நிர்வாகிகள் 100-க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். நிறைவில் பொதுமக்களுக்கு அன்ன தானம் வழங்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com