பசுமை வழி சாலை திட்டம்: 26, 27-ந் தேதிகளில் அன்புமணி மக்களிடம் கருத்து கேட்கிறார்- ராமதாஸ் தகவல்
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தின் தலைநகரான சென்னைக்கும், மேற்கு மாவட்டங்களின் நுழைவாயிலாகத் திகழும் சேலம் நகருக்கும் இடையே வலிமையான, வசதியான சாலைக் கட்டமைப்பு இருக்க வேண்டும் என்பதில் யாருக்கும் எந்த மாற்றுக்கருத்தும் இருக்க முடியாது. ஆனால், சென்னையில் இருந்து சேலத்திற்கு உளுந்தூர்பேட்டை வழியாக ஒரு தேசிய நெடுஞ்சாலை, வேலூர், கிருஷ்ணகிரி வழியாக இன்னொரு நெடுஞ்சாலை என இரு தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
சென்னையில் இருந்து திண்டிவனம், கிருஷ்ணகிரி வழியாக 3-வது தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இவைதவிர மாநில சாலைகளும் உள்ளன. இவ்வளவும் போதாதென சேலத்திற்கு புதிதாக 8 வழி சாலை அமைக்க வேண்டிய தேவை என்ன? என்பது தான் ஒட்டுமொத்த தமிழகமும் எழுப்பும் வினா ஆகும்.
பசுமைவழி சாலையை எதிர்ப் பவர்கள் அனைவரும் வளர்ச்சிக்கு எதிரானவர்கள் என்று மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சிசெய்பவர்கள் கூறுவது கேலிக்கூத்தானது. பா.ம.க. வளர்ச்சிக்கு எதிரான கட்சி அல்ல. ஆனால், ஒரு நிறுவனம் வாழ்வதற்காக 7,500 குடும்பங்களின் வாழ்வாதாரம் பறிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது. மக்களை சொந்த ஊரில் அனாதைகளாக்கும் பசுமைச் சாலை திட்டம் கைவிடப்பட வேண்டும்.

