பாராளுமன்ற தேர்தலில் கேரளாவில் அதிக தொகுதிகளை கைப்பற்றுவோம்: அமித்ஷா

வருகிற பாராளுமன்ற தேர்தலில் கேரளாவில் அதிக தொகுதிகளை பாரதிய ஜனதா கைப்பற்றும் என தேசிய தலைவர் அமித்ஷா பேசியுள்ளார்.
பாரதிய ஜனதா தேசிய தலைவர் அமித்ஷாவுக்கு வீரவாள் கொடுத்து அக்கட்சியினர் வரவேற்பு அளித்த காட்சி.
பாரதிய ஜனதா தேசிய தலைவர் அமித்ஷாவுக்கு வீரவாள் கொடுத்து அக்கட்சியினர் வரவேற்பு அளித்த காட்சி.
Published on

பாராளுமன்ற தேர்தல் முன்னேற்பாடு பணிகளை பாரதிய ஜனதா கட்சி தற்போதே தொடங்கிவிட்டது. இதை தொடர்ந்து அந்த கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா பல்வேறு மாநிலங்களில் சுற்றுப்பயணம் செய்து பாரதிய ஜனதா கட்சியை வலுப்படுத்தி வருகிறார். கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்து தேர்தல் வியூகங்களை வகுத்துக் கொடுத்து வருகிறார்.

இதன் ஒரு கட்டமாக கடந்த வெள்ளிக்கிழமை அமித்ஷா கேரளா வந்தார். அங்கு கட்சி நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார். நேற்று திருவனந்தபுரத்தில் நடந்த பாரதிய ஜனதா கட்சியின் தேசிய, மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் அமித்ஷா கலந்து கொண்டு பேசினார். அதன் பிறகு திருவனந்தபுரம் வெள்ளையம்பலம் பகுதியில் உள்ள தியாகி அய்யங்காளி சிலைக்கு மாலை அணிவித்து அமித்ஷா மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் மாநில தலைவர் கும்மனம் ராஜசேகரன் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

வெள்ளையம்பலத்தில் பாரதியஜனதா கட்சியின் கேரள மாநில தலைமை அலுவலகம் பிரமாண்டமாக கட்டப்படுகிறது. இதற்கான அடிக்கல்லை அமித்ஷா நாட்டினார். அப்போது அவர் பேசியதாவது:-

பாரதியஜனதா மாநில கட்சி அலுவலகம் 18 மாதங்களில் கட்டி முடிக்கப்படும். இதன் திறப்பு விழாவுக்கு பிரதமர் நரேந்திர மோடியை நான் அழைத்து வருவேன். கடந்த பாராளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்ற மோடி தனது மக்கள் நல திட்டங்கள் மூலம் இந்திய மக்கள் மனதில் நிரந்தர இடத்தை பிடித்துள்ளார். இன்னும் 3 ஆண்டுகளில் மக்கள் நன்மை பெறும் பல்வேறு திட்டங்களை மோடி அறிவிக்க உள்ளார். எண்ணிக்கையில் கூற முடியாத அளவுக்கு பல திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.


உலக நாடுகளுடன் நெருக்கமான உறவை பிரதமர் மோடி ஏற்படுத்தி உள்ளார். இதன்மூலம் இந்தியா வல்லரசாக மாறி வருகிறது. மோடி அரசு உலக நாடுகள் பாராட்டும் அரசாக மாறி உள்ளது. உலகமே இந்தியாவை திரும்பி பார்க்கும் வகையில் மோடி ஆட்சி செய்து வருகிறார். தேர்தலின் போது கொடுத்த அனைத்து வாக்குறுதிகளும் 5 ஆண்டுகளுக்குள் நிறைவேற்றப்படும். பாமர மக்கள் விரும்பும் ஆட்சியாக பாரதிய ஜனதா நல்லாட்சி செய்து வருகிறது.

கேரளாவில் பாரதிய ஜனதா கட்சியால் அரசியலில் கால் ஊன்றமுடியாது என்று கம்யூனிஸ்டு கட்சியும், காங்கிரஸ் கட்சியும் கூறி வந்தன. கடந்த சட்டசபை தேர்தலில் ஒரு எம்.எல்.ஏ. பாரதிய ஜனதாவுக்கு கிடைத்ததன் மூலம் கேரளாவில் பாரதிய ஜனதா கால் ஊன்றி விட்டது.

வருகிற பாராளுமன்ற தேர்தலில் கேரளாவில் அதிக தொகுதிகளை பாரதிய ஜனதா கைப்பற்றும். இதன் மூலம் கேரளாவுக்கு மத்திய மந்திரி பதவியும் அதிகளவு வழங்கப்படும். விழிஞ்ஞம் துறைமுகம் திட்டம், மெட்ரோ ரெயில் திட்டம் போன்ற மத்திய அரசின் திட்டங்கள் கேரளாவில் செயல்படுவதற்கு மோடி அரசுதான் காரணம். இன்னும் ஏராளமான திட்டங்கள் கேரளாவுக்காக காத்திருக்கிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com