காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க பிரதமரிடம் வலியுறுத்த வேண்டும் - அனைத்துக்கட்சி தலைவர்கள் கோரிக்கை

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க பிரதமரை சந்தித்து வலியுறுத்த வேண்டும் என்று தமிழகத்தில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் தலைவர்கள் கோரிக்கை விடுத்தனர். #Cauveryverdict #Allpartymeeting #CauveryWater
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க பிரதமரிடம் வலியுறுத்த வேண்டும் -  அனைத்துக்கட்சி தலைவர்கள் கோரிக்கை
Published on

காவிரி நதி நீரை பங்கீடு செய்யும் வழக்கில் சுப்ரீம்கோர்ட்டு கடந்த 16-ந்தேதி இறுதி தீர்ப்பை வழங்கியது.

அந்த தீர்ப்பில் தமிழ்நாட்டுக்கு ஏற்கனவே காவிரி நடுவர் மன்றம் வழங்கிய 192 டி.எம்.சி. தண்ணீருக்கு பதிலாக 177.25 டி.எம்.சி. தண்ணீர் வழங்க உத்தரவிடப்பட்டது. இதனால் தமிழ்நாட்டுக்கு தண்ணீரின் அளவு 14.75 டி.எம்.சி. குறைந்துள்ளது.

காவிரி நதி நீரை தமிழகமும், கர்நாடகமும் பங்கீடு செய்து கொள்ள மத்திய அரசு 6 வாரத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்தது. இதற்கு கர்நாடகா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சீராய்வு மனு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்வோம் என்று, கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா அறிவித்துள்ளார். இதையடுத்து காவிரி நீரை பெற தமிழக அரசு உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. குறிப்பாக அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி ஆலோசிக்க வேண்டும் என்று வலியுறுத்தின.

இதையடுத்து தமிழக அரசு சார்பில் இன்று (22-ந் தேதி) அனைத்துக்கட்சி கூட்டம் கூட்டப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி இன்று காலை 10.30 மணிக்கு தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் 10-வது தளத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்கியது.

கூட்டத்துக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கினார். துணை முதல்-அமைச் சர் ஓ.பன்னீர்செல்வம் வரவேற்று பேசினார்.

தி.மு.க. சார்பில் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், துரைமுருகன், காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், கே.ஆர்.ராமசாமி, திராவிட கழகம் சார்பில் கி.வீரமணி, கலிபூங்குன்றன், பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், இல.கணேசன், விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், ரவிக்குமார், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, நாம்தமிழர் கட்சி சீமான், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், ஞானதேசிகன், பா.ம.க. ஜி.கே.மணி, ஏ.கே.மூர்த்தி, தே.மு.தி.க. சுதீஷ், அழகாபுரம் மோகன்ராஜா, மனித நேய மக்கள் கட்சி ஜவாஹிருல்லா உள்ளிட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

அ.தி.மு.க. கூட்டணி கட்சி தலைவர்களான கருணாஸ், தமிமுன் அன்சாரி, சரத்குமார், விவசாய சங்க தலைவர்கள் பி.ஆர்.பாண்டியன், அய்யாக்கண்ணு உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

கூட்டத்தை தொடங்கி வைத்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், “அனைத்து கட்சி தலைவர்களும் தங்களது கருத்துக்களை தெரிவிக்குமாறு” கேட்டுக் கொண்டார்.

துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், “காவிரி வழக்கில் தமிழகத்தின் திறம்பட்ட வாதத்தால் பயன் அளிக்கும் தீர்ப்பு கிடைத்துள்ளதாக” கூறினார்.

தொடர்ந்து மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் பேசினார்கள். கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து கட்சி தலைவர்களுக்கும், பிரதிநிதிகளுக்கும் பேசுவதற்கு 5 நிமிடம் வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஒவ்வொருவராக பேசி வருகிறார்கள். இதனால் மாலை வரை கூட்டம் நடைபெறும் என்று தெரிகிறது.

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பால் தமிழகத்துக்கு ஏற்பட்டுள்ள பாதகங்களை எடுத்துக்கூறிய தலைவர்கள் தமிழக அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி ஆலோசனை வழங்கினார்கள்.

சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும், காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரத்துக்குள் அமைக்க வலியுறுத்தி சட்டசபையை கூட்டி தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.

மேலும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அனைத்து கட்சி தலைவர்களுடன் டெல்லி சென்று பிரதமர் மோடி மற்றும் மத்திய மந்திரிகளை நேரில் சந்தித்து உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்த வேண்டும் என்றும் ஆலோசனைகள் வழங்கி பேசினார்கள்.

கூட்டத்தின் முடிவில் இது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. அனைத்து கட்சி தலைவர்களும் ஏற்றுக்கொள்ளும் வகையில் அவர்களது ஒத்துழைப்புடன் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது. #Cauveryverdict #Allpartymeeting #CauveryWater #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com