உச்ச நீதிமன்ற தீர்ப்பால் நெருக்கடி -மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் ராஜினாமா

பெரும்பான்மையை நிரூபிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து கடும் நெருக்கடி ஏற்பட்டதால் மகாராஷ்டிர துணை முதல்வர் பதவியை அஜித் பவார் ராஜினாமா செய்தார்.
அஜித் பவார்
அஜித் பவார்
Published on

மும்பை:

மகாராஷ்டிராவில் சிவசேனா தலைமையில் ஆட்சியமைக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை அடைந்த நிலையில், சனிக்கிழமை அதிகாலை திடீர் திருப்பம் ஏற்பட்டது. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அஜித் பவார் ஆதரவுடன் பாஜக ஆட்சியமைத்தது. பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராகவும், அஜித் பவார் துணை முதல்வராகவும் பதவியேற்றனர்.

பாஜக ஆட்சியமைப்பதற்கு அழைப்பு விடுத்த ஆளுநரின் முடிவை எதிர்த்து சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இவ்வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், பாஜக அரசு நாளை பெரும்பான்மையை நிரூபிக்கவேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இதனால் பட்னாவிஸ் அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இணைந்த கூட்டணிக்கு பெரும்பான்மை இருப்பதாக கூறி, எம்எல்ஏக்கள் ஆதரவு கடிதத்தை ஆளுநரிடம் கொடுத்துள்ளனர். நேற்று இரவு நட்சத்திர ஓட்டலில் அந்த எம்எல்ஏக்களின் அணிவகுப்பையும் நடத்தி தங்கள் பலத்தை காண்பித்தனர்.

எனவே, நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும்போது தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான பாஜக அரசு எதிர்க்கட்சிகளால் தோற்கடிக்கப்படும் நிலை உள்ளது. எனவே, வாக்கெடுப்பை சந்தித்து தோல்வியை சந்திப்பதற்கு பதில், பதவியை ராஜினாமா செய்யலாம் என தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், துணை முதல்வர் அஜித் பவார் இன்று பிற்பகல் பதவியை ராஜினாமா செய்தார். அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் பட்னாவிசும், பதவியை ராஜினாமா செய்திருப்பதாக அறிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com