

சென்னை:
முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா மறைந்ததை அடுத்து, அ.தி.மு.க.வின் தலைமைப் பொறுப்புக்கு சசிகலா வந்தார். இதனையடுத்து, அவர் முதல்வர் பதவிக்கு கட்சியினரால் முன்னிலைப்படுத்தியதை அடுத்து, ஓ.பன்னீர் செல்வர் அதிருப்தி ஏற்பட்டு கட்சியை இரண்டாக உடைத்தார்.
முக்கிய சில நிர்வாகிகள் ஓ.பன்னீர் செல்வம் அணிக்கு சென்றாலும், பெரும்பாலான நிர்வாகிகள் சசிகலாவின் பக்கமே நின்றனர். இதன் பின்னர் சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் வழங்கிய நான்காண்டு சிறை தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதிபடுத்தியது. இதனால், சசிகலா உள்ளிட்ட மூவர் சிறையிலடைக்கப்பட்டனர். எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பொறுப்பேற்றார்.
சசிகலா சிறை சென்றதும் டி.டி.வி தினகரன் கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக அறிவிக்கப்பட்டார். இதனையடுத்து, சசிகலா குடும்பத்தினரை கட்சியிலிருந்து வெளியேற்றினால் மீண்டும் இரு அணிகளும் இணையும் என ஓ.பன்னீர் செல்வர் அறிவித்தார்.
அதற்கேற்ப, அ.தி.மு.க.வில் தினகரனுக்கு எதிராக குரல்கள் எழும்பின. தினகரனை வெளியேற்ற தயார் என அமைச்சர் ஜெயக்குமார் வெளிப்படையாகவே கூறினார்.
பின்னர், இரு அணிகளும் இணைவதற்கு தேவையான பேச்சுவார்த்தை நடத்த குழு அமைக்கப்பட்டது. ஆனால், சில நாட்களில் எந்த பேச்சுவார்த்தையும் இல்லாததால் இக்குழு கலைக்கப்பட்டது. இதற்கிடையே, எடப்பாடி பழனிச்சாமி அணியில் பல எம்.எல்.ஏ.க்கள் தினகரனுக்கு ஆதரவுக்கரம் நீட்டினர்.
மூன்று அணிகளாக பிரிந்து உச்ச கட்ட குழப்ப நிலையில் அக்கட்சி இருக்கும் இந்த நிலையில், பிரிந்து போன ஓ,பன்னீர் செல்வம் அணியுடன் இணைவதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு இன்று அவர் அளித்துள்ள பேட்டியில், இந்த தகவலை தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக தொடர்வதற்கு ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாக இருப்பார் எனவும், அ.தி.மு.க.வை வழிநடத்த 7 பேர் கொண்ட குழு ஏற்படுத்தப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இக்குழுவின் தலைவராக ஓ.பன்னீர் செல்வமும், துணைத் தலைவராக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் இருப்பார்கள் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.