

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவேன் என்று டி.டி.வி.தினகரன் நேற்று பரபரப்பு பேட்டி அளித்தார்.
இதற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்தார். நேற்று நடந்த அண்ணா பிறந்தநாள் விழாவில் எங்களை வீட்டுக்கு அனுப்புவதாக தினகரன் கூறியிருக்கிறார். அவர் விரைவில் மாமியார் வீட்டுக்கு (ஜெயிலுக்கு) செல்வார் என்று கூறினார்.
தினகரனின் ஆட்சி கவிழ்ப்பு மிரட்டலுக்கு அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், வெல்லமண்டி நடராஜன், ஓ.எஸ்.மணியன் ஆகியோரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
திண்டுக்கல்லில் நடந்த அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது:-
ஜெயலலிதா உடல்நலக் குறைவால், 75 நாட்கள் மருத்துவமனையில் இருந்தார். அப்போது சசிகலா, அவருடைய குடும்பத்தினர் மட்டுமே பார்த்தனர். எங்களால் பார்க்க முடியவில்லை.
ஜெயலலிதா இறந்ததும், பொதுச்செயலாளராக சசிகலா இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தோம். ஆனால், அவருக்கு முதல்-அமைச்சர் ஆசை வந்தது.
உடனே முதல்-அமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வத்தை ராஜினாமா செய்ய வைத்தார். ஆனால், சொத்து குவிப்பு வழக்கில் அவர் சிறை சென்று விட்டார். சசிகலா குடும்பத்தினர்தான், ஜெயலலிதா மரணத்துக்கு காரணம் என தமிழக மக்கள் பேசுகின்றனர். சிகிச்சைக்கான மருந்தை உலகத்தில் எங்கு இருந்தாலும் வாங்கி இருக்கலாம்.
ஆனால், நோய் முற்றி இயற்கையாக மரணம் அடைய வேண்டும் என விட்டுவிட்டனர். உண்மையை பேசி விடுவார்கள் என்பதற்காக மத்திய மந்திரி அருண்ஜெட்லி, கவர்னர், ராகுல்காந்தி என பலர் வந்தும் யாரையும் பார்க்க விடவில்லை.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் யாரை நிறுத்தலாம் என யோசித்த போது, டி.டி.வி.தினகரன் தன்னை போட்டியிடும்படி சசிகலா கூறியதாக தெரிவித்தார்.
இடைத்தேர்தலில் வெற்றிபெற்று எம்.எல்.ஏ. ஆகி முதல்-அமைச்சராகி விடவேண்டும் என திட்டமிட்டார். இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டதால், தர்மம் காப்பாற்றப்பட்டது.
45 நாட்கள் சிறையில் இருந்து வெளியே வந்ததும் 2 அணிகளும் இணையவில்லை. சாட்டையை எடுக்க போகிறேன் என்றார். நாங்கள் பொதுக்குழுவை கூட்டி பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சசிகலாவை நீக்கினோம். டி.டி.வி.தினகரனை பற்றி பேசவேயில்லை. ஏனெனில், அவர் கட்சியில் உறுப்பினராக கூட இல்லை. சில நாட்கள் அவருடன் இருந்ததற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்.
19 எம்.எல்.ஏ.க்களை வைத்துள்ளதாக கூறும் அவர், தி.மு.க.வுடன் சேர்ந்து ஆட்சியை கவிழ்க்க சதி செய்கிறார். அவரிடம் இருக்கும் எம்.எல்.ஏ.க்கள் எங்களிடம் பேசுகின்றனர். சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தால் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு ஆதரவு அளிப்பதாக கூறியுள்ளனர்.
இவ்வாறு அவர் பேசினார்.
திருச்சியில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-
அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஜெயலலிதா மறைவிற்கு சசிகலா, தினகரன் ஆகியோர் காரணம் என்று திண்டுக்கலில் பேசியுள்ளார். ஏன் என்றால் அவர்கள் தான் ஜெயலலிதா அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற போது அமைச்சர்களையும், கட்சி நிர்வாகிகளையும் சந்திக்க விடவில்லை. இதற்காகத் தான் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விசாரணை கமிஷன் அறிவித்துள்ளார்.
தினகரன் அ.தி.மு.க.வில் அடிப்படை உறுப்பினர் கூட இல்லை. அவர் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் கட்சியை விட்டு நீக்கப்பட்டவர். ஆனால் அவர் இப்போது கட்சி நிர்வாகிகளை நீக்குவதாக தினமும் அறிவித்து வருகிறார். அவர் சிறைக்கு செல்வது உறுதி.
இவ்வாறு அவர் கூறினார்.
கும்பகோணத்தில் நடந்த அண்ணா பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேசியதாவது:-
ஜெயலலிதா மட்டும்தான் தொண்டர்களால் ஏற்று கொள்ளபட்டுள்ள தலைவராக இருப்பவர் தினகரன் தற்போது எல்லோரின் பொறுப்பையும் எடுத்து விட்டார். ஜெயலலிதா இருந்திருந்தால் அவரது பொறுப்பையும் எடுத்திருப்பார்.
அ.தி.மு.கவில் பொறுப்பு போடும் பதவி எப்படி ஆகி விட்டது என்றால் காலையில் துண்டு போட்டவரெல்லாம் அமைப்பு செயலாளர் ஆகி விட்டார்கள், கிளைக் கழக செயலாளர் பதவிக்கு கூட வரமுடியாதவர்கள் அமைப்பு செயலாளர்கள் ஆகிவிட்டார்கள். எத்தனை அமைப்பு செயலாளர்கள் போட்டுள்ளார்கள் என்பது அவருக்கும் தெரியாது. யாருக்கும் தெரியாது.
இவ்வளவு நாள் நான் பேசவில்லை ஏனென்றால், மற்றவர்கள் பேசினால் லேசாக போகிவிடும், நான் பேசினால், மரத்திற்கு வேர் இருக்காது. அதனால் தான் பேசவில்லை.
நாகை மாவட்டத்தில் அ.தி.முக. சட்டமன்ற உறுப்பினர்களும் எடப்பாடியிடம் என்ன சொன்னோம் என்றால், தினகரனை ஒரு போதும் ஏற்க முடியாது. சசிகலாவை ஒதுக்க முடியாது. அ.தி.மு.கவின் சுமைதாக்கியாக இருப்பவர் சசிகலா என்று கூறினேன். இதை தப்பாக எடுப்பவர்கள் தப்பாக எடுத்து கொள்ளலாம், சரியாக எடுப்பவர்கள் சரியாக எடுத்துக் கொள்ளலாம்.